ஆர்.கே.நகர் பார்முலா போல அதிமுக பணப்பட்டுவாடா செய்ய வீடு வீடாக விண்ணப்பம் விநியோகம்

* 100 பேருக்கு ஒரு பொறுப்பாளர் நியமனம்

* தேர்தல் அதிகாரியிடம் திமுக பரபரப்பு புகார்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள வைரவபுரம், நேரு நகர், காளையப்பநகர், ஆஞ்சநேயர் நகர், நெசவாளர் தெரு, சங்கராபுரம், சங்கம்திடல், பழைய செஞ்சை, காதிநகர், நாகவயல் ரோடு, வேடன் நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று வீடுகளில் அதிமுக நிர்வாகிகள் சார்பில் ஓட்டுக்கு பணம் வழங்குவதற்காக விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி திமுகவினர், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். இது குறித்து திமுக ஒன்றிய செயலாளர் சின்னத்துரை, துணை செயலாளர் சொக்கலிங்கம், சட்ட பாதுகாப்பு பிரிவு பாலசுப்பிரமணியன் ஆகியோர் கூறுகையில், ‘‘சங்கராபுரம் பகுதியில் அதிமுகவினர் வீடு வீடாக படிவம் வழங்கி பணம் பட்டுவாடா செய்ய ஆர்.கே.நகர் பார்முலாவை கையில் எடுத்துள்ளனர். இதன்படி வாக்காளர்கள் எண், பெயர், செல்போன் எண்களை படிவத்தில் பூர்த்தி செய்து வாங்கி ஒரு வீட்டில் எத்தனை வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்பதை தெரிந்து கொள்வார்கள். பின்னர் தங்களுக்கு சாதகமாக உள்ளவர்களுக்கு போன் செய்து உறுதி செய்துகொண்டு 100 ஓட்டுக்கு ஒரு பொறுப்பாளரை நியமித்து அவர்கள் மூலம் பணம் பட்டுவாடா செய்ய உள்ளனர். இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளோம்’’ என்றனர்.

மூட்டை மூட்டையாக புத்தகப்பை பறிமுதல்: தஞ்சாவூர், பழைய கலெக்டர் அலுவலகம் முன் ராஜஸ்தான் பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரி வெகு நேரமாக நிற்பதாக வந்த தகவலின்பேரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கண்டெய்னர் சென்று சோதனை செய்தனர். அதில், முதல்வர் எடப்பாடி மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா படம் அச்சடிக்கப்பட்ட புத்தக பைகள் இருந்தன. இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டன. தகவறிந்த திமுக வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் சண்முகசுந்தரம் தலைமையிலான திமுகவினர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், முதல்வர் படத்துடன் உள்ள புத்தகப்பைகள் வெளிமாநிலங்களில் இருந்து வருவது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அதிகாரிகள் கண்டெய்னர் லாரியை ராஜப்பா நகரில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம் சார்பில் தஞ்சாவூர், திருவையாறு, கும்பகோணம், பாபநாசம் உள்ளிட்ட 9 கல்வி வட்டாரங்களில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்க ரூ.47.64 லட்சம் மதிப்பில் 31,083 புத்தக பைகள் இருந்தன. உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத் ஊரில் இருந்து கடந்த மாதம் 22ம் தேதி புறப்பட்டு வந்ததாக தெரியவந்தது. இதையடுத்து, 900 பண்டல்களை இறக்கி திமுகவினர் முன் ஒவ்வொன்றாக பிரித்து காட்டியபின் ஒரு அறையில் வைத்து அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Related Stories: