234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட டிடிவி.தினகரன் முடிவு

சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக கட்சிகள் வேட்பாளர் நேர்காணலை நடத்தி வருகின்றன. இந்தநிலையில், அமமுக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்பமனு வினியோகம் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல்நாளான நேற்று முன்தினம் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்பமனுக்களை அளித்துள்ளனர். 2வது நாளான நேற்றும் விருப்ப மனு வினியோகம் நடைபெற்றது. இந்தசூழ்நிலையில் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா நேற்று முன்தினம் அறிவித்தார். இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் சசிகலா மறைமுகமாக டிடிவிக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர் அரசியலில் இருந்து ஒதுங்கினாலும் தினகரனை ஒதுங்கும்படி கூறவில்லை. இதனால் தினகரன் தெம்பாகவே அரசியல் களத்தில் இறங்கியுள்ளார்.

இந்தநிலையில், அமமுகவை 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட வைக்க டிடிவி.தினகரன் முடிவு செய்துள்ளார். சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் அவர் இன்று காலை அவசர ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்தும், தேர்தல் பிரச்சாரங்கள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், தேர்தல் பிரச்சார வாகனம் மற்றும் போஸ்டர்களில் ஜெயலலிதாவின் படங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். சசிகலா படத்தை பயன்படுத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல், தொகுதிக்கு ரூ.5 கோடி வீதம் தேர்தல் செலவிற்காக ஒதுக்கவும் டிடிவி.தினகரன் முடிவு செய்துள்ளார். மேலும், சட்டப்பேரவை தேர்தல் விருப்பமனுக்கள் பெற்று வரும் நிலையில் விரைவில் வேட்பாளர் நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளது. இதேபோல், வரும் 10ம் தேதி 234 தொகுதிகளிலும் அமமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர் பட்டியலை டிடிவி.தினகரன் அறிவிப்பை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories:

>