மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 12,000 தெரு விளக்குக்கு மட்டும் ரூ.26 கோடி செலவு கணக்கு

மதுரை: இந்தியா முழுவதும் 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மேம்படுத்துவதற்காக, மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கொண்டு வந்தது.  இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 10 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. மதுரை நகரில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.1,000 கோடி மதிப்பில் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. அதில், பெரியார் பஸ்நிலையம் சீரமைப்பு பணி, மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் சீரமைப்பு பணி, வைகை ஆற்றங்கரையில் பூங்கா, அடுக்குமாடி வாகன காப்பகம் உள்பட 13 பணிகள் நடந்து வருகிறது. ஆமை வேகத்தில் பல ஆண்டுகளாக நடந்து வரும் இந்த திட்டத்தால் மதுரை மாவட்ட மக்கள் மட்டுமின்றி மதுரைக்கு வரும் தென் மாவட்ட மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆற்றுக்குள் சாலை : ஒரு பணியைத் துவக்கினால் முடித்து விட்டு மறுபணியை ஆரம்பிப்பதற்கு பதில், மதுரை நகர் முழுவதும் கிணறு வெட்ட தோண்டியது போல எங்கு பார்த்தாலும் பள்ளமாய் உள்ளது. அத்துடன் இலக்கியச்சிறப்பு வாய்ந்த வைகை ஆற்றை சுருக்கி ஆற்றுக்குள்ளேயே சாலை அமைக்கும் கொடுமையும் நடந்து வருகிறது.

பகிரங்க குற்றச்சாட்டு : ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், தெருவிளக்கு அமைக்கிறோம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது தற்போது ஆர்.டி.ஐ தகவல் மூலம் வெளிப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்படி தகவல் பெற்ற இந்திய ஜனநாய வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கார்த்திக் கூறுகையில், ‘‘ரூ.30.25 கோடி மதிப்பில் 30 ஆயிரத்து  337 விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மதுரை நகரில் உள்ள 78 வார்டுகளில் மட்டும் 18 ஆயிரத்து 380 விளக்குகள் அமைத்ததாக சொல்கிறார்கள். இதற்கு மட்டும் ரூ.4.25 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இது அவர்கள் சொல்லும் மொத்த விளக்குகளில் ஐந்தில் மூன்று பங்கு விளக்குகளுக்கான தொகையாகும். மீதமுள்ள சுமார் 12 ஆயிரம் தெருவிளக்குகளுக்கு மாநகராட்சியின் கணக்கின்படி சுமார் ரூ.26 கோடியை செலவிட்டிருக்கிறார்கள். அதன்படி ஒரு விளக்கின் விலை சராசரி ரூ.21,666 ஆகும். 26 கோடி ரூபாய்க்கு எத்தனை வாட்ஸ் பல்ப் வாங்கப்பட்டது என்ற விபரம் தெரிவிக்கவில்லை.

அமைச்சர்களுக்கு தொடர்பு :

எல்இடி விளக்குகளை தயார் செய்யும் எத்தனையோ கம்பெனி இருக்கும் போது,  சென்னையில் உள்ள பொருட்களை வாங்கி விற்கும் டீலரிடம் 30.25 கோடி ரூபாய்க்கான பல்புகளை  ஏன் கொள்முதல் செய்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. குறிப்பிட்ட ஒரு டீலரிடம் மட்டும் இத்தனை கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்வது என்பதே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதற்கான முகாந்திரம் உள்ளது. இதில் மதுரை மாவட்ட அமைச்சர்கள், அதிமுக எம்எல்ஏக்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு தொடர்பு உள்ளது. எனவே, பதில் சொல்ல வேண்டிய இடத்தில் அவர்கள் இருக்கிறார்கள்’’ என்றார்.

Related Stories: