×

வாகன சோதனையில் ரூ.11 கோடி பறிமுதல் மாஸ்க் அணிந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதி: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டமன்ற தேர்தலை கண்காணிக்க 4 சிறப்பு பார்வையாளர்கள் தமிழகம் வர உள்ளனர். அதன்படி செலவின பார்வையாளர்களாக மதுமகாஜன், பாலகிருஷ்ணன் (ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரிகள்) ஆகிய 2 பேரும், பொது பார்வையாளராக அலோக்வர்தன் (ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி), காவல்துறை சிறப்பு பார்வையாளராக தர்மேந்திரகுமார் (ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி) ஆகியோர் இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர்.அதேபோன்று தமிழகத்தில் இருந்து தேர்தல் நடைபெறும் மற்ற மாநிலங்களுக்கு 60 பேர் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகள் சிறப்பு பார்வையாளர்களாக செல்கின்றனர்.

வாக்களிக்க வரும் பொதுமக்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதிப்படுவார்கள். கொரோனா காரணமாக கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வாக்குப்பதிவு நேரம் கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெறும். ஆனால், எப்போது வாக்குப்பதிவு முடியும் என்பதை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும்.தமிழகத்தில், இதுவரை பறக்கும் படை, வருமான வரி துறை நடத்திய சோதனையில் நேற்று (மே 2ம் தேதி) வரை பணம், பரிசு பொருள் என ₹11 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் பணமாக மட்டும் ₹10.35 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும். ஆனால் கட்டாயம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா நோயாளிகளுக்கு பிபி-கிட் கட்டாயம் 16ம் தேதிக்குள் 12டி படிவம் கட்டாயம்
தபால் வாக்கு அளிக்க விருப்பம் உள்ள 80 வயதுக்கு மேல் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வருகிற 16ம் தேதிக்குள் 12டி விண்ணப்பம் வாங்க வேண்டும். வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடுகளுக்கே விண்ணப்பம் கொண்டு வருவார்கள். டிஆர்ஓ அலுவலகத்தில் விண்ணப்பம் வாங்கலாம். கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வரும்போது கண்டிப்பாக பிபி-கிட் அணிந்துதான் வாக்களிக்க வேண்டும். அவர்கள்  வாக்குப்பதிவு முடியும் ஒரு மணி நேரத்துக்கு முன்தான் வாக்குப்பதிவு மையத்துக்கு வர வேண்டும். இவர்களுக்கான பிபி-கிட் வாக்குப்பதிவு மையங்களில்  தேர்தல் ஆணையமே இலவசமாக வழங்கும். வருகிற 16ம் தேதிக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தபால் வாக்கு அளிக்கலாம் என்று தேர்தல் அதிகாரி கூறினார்.

ஸ்பீட் போஸ்ட் மூலம் வாக்காளர் அட்டை
தமிழக தேர்தல் அதிகாரி மேலும் கூறியதாவது, தமிழகத்தில் புதிதாக 21 லட்சம் பேருக்கு இந்த ஆண்டு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கு தற்போது விரைவு தபால் (ஸ்பீட் போஸ்ட்) மூலம் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 4 லட்சம் பேருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு விரைவாக வாக்காளர் அட்டை கொடுப்பதற்காக வருகிற 13, 14ம் தேதி 30 ஆயிரம் வாக்குப்பதிவு மையங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அங்குள்ள கம்ப்யூட்டர் மூலம் தங்களின் செல்போனில் வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்யலாம். பின்னர் அதை பிரிண்ட் எடுத்து வைத்தால், தேர்தல் நாளன்று அதை  காட்டி வாக்களிக்க முடியும். பொதுமக்களும் voterportal.eci.gov.in என்ற இணையதளம் மூலமும் பதிவிறக்கும் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Chief Electoral Officer ,Tamil ,Nadu , Vehicle raid, Rs 11 crore, seizure, mask
× RELATED தேசிய சராசரியைவிட தமிழகத்தில்...