சட்டமன்ற தேர்தல் பணிகளை வழங்கக்கோரி புகைப்பட கலைஞர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்

மதுராந்தகம்: தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சி சார்பில் பணம் பட்டுவாடா, பரிசு பொருள் வினியோகம் உள்பட பல்வேறு சம்பவங்களை தடுக்க வட்டாட்சியர் தலைமையில், தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இதில், மாநிலம் முழுவதும் தாலுகா வாரியாக ஒப்பந்த அடிப்படையில் புகைப்பட கலைஞர்கள், வீடியோ கேமரா மேன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டார புகைப்பட கலைஞர்கள் சங்கம் மதுராந்தகத்தில் உள்ளது. இச்சங்கம், சார்பில் வரும் சட்டமன்ற தேர்தலில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் பணிகளை இப்பகுதியில் உள்ள புகைப்பட கலைஞர்களுக்கு வழங்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆனால், அந்த மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், மதுராந்தகம் பகுதி புகைப்பட கலைஞர்கள், தங்களுக்கு தேர்தல் பணியில் வாய்ப்பு வழங்காததை கண்டித்து 50க்கும் மேற்பட்டோர் மதுராந்தகம் ஆர்டிஓ அலுவலகம் முன் திரண்டனர். அங்கு, அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தட்டு ஏந்தி, பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து மதுராந்தகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவர்களிடம் சமரசம் பேசினர். அப்போது, தேர்தல் பணிகள் உள்ளதால், அதிகாரிகள், உங்களது கோரிக்கை மனுக்களை பார்த்திருக்க வாய்ப்பில்லை. மேலும், அனுமதியின்றி போராட்டம் நடத்தக் கூடாது. முறையாக அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டு செல்லுங்கள். நாங்களும், இதுபற்றி பேசுகிறோம் என்றனர். இதையடுத்து அவர்கள், ஆர்டிஓவிடம் மனு அளித்துவிட்டு சென்றனர்.

Related Stories:

>