நாலா பக்கம்: புதுவை; கேரளா; மேற்கு வங்கம்; அசாம்

* அழைப்புக்காக காத்திருக்கும் கைக்காரர்கள்

புதுவையில் தேர்தல் யுத்தத்துக்கு தயாராகி விட்ட அரசியல் கட்சிகள், ஒவ்வொரு தொகுதியிலும் செல்வாக்கு மிகுந்த வேட்பாளர்களை தங்கள் வசம் இழுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளன. அதே நேரத்தில், ஆட்சி கவிழ்ப்பு திட்டத்துக்கு அடுத்தபடியாக, மற்ற கட்சிகளை சேர்ந்த மேலும் சில பிரபலங்களை இழுப்பதற்காக  காய் நகர்த்தி வருகிறது பாஜ. இதனால், காங்கிரஸ் தரப்பு சற்று உஷாராகவே இருக்கிறது. இந்த பரபரப்புக்கு இடையே ஒரு சில தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களாக நிறுத்தப்படலாம் என்று கருதப்படும் சிலர், தங்கள் ஆதரவாளர்கள் கூட்டத்தை திடீரென கூட்டியுள்ளனர். அதில், சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சி சார்பில் போட்டியிலாம் என்று ஆதரவாளர்களிடம் அவர்கள் கருத்து கேட்டு இருக்கிறார்களாம். காரணம், கட்சித் தாவினால் பணத்துக்கு பணமும் கிடைக்கும், தொகுதியும் கிடைக்கும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு. அதற்கான அழைப்பு பாஜ.விடம் இருந்து வருமா? என்று காத்து கிடக்கிறார்களாம். இதனால், காங்கிரஸ் இருந்து மேலும் சில விக்கெட்டுகள் விழலாம் என்று எதிர்பார்க்கிறது.

* மம்தாவை ஆதரிக்கும் வெளிமாநில கட்சிகள்

மேற்கு வங்கத்தில் மம்தாவை வீழ்த்தி ஆட்சியை பிடிக்கும் உத்வேகத்தில் இருக்கிறது  பாஜ. அது, நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக, ஆளும் திரிணாமுல்லின் முக்கிய புள்ளிகளை வளைத்து போட்டுக் கொண்டிருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இதனால், முக்கிய கட்சிகளின் கூட்டணி இல்லாமல் சொந்த பலத்தில் களம் காண்கிறார் முதல்வர் மம்தா. அவரை பாஜ படுத்தும்பாட்டை கண்டு கோபம் அடைந்துள்ள வெளிமாநில கட்சிகள், தாமாக முன்வந்து அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. ஏற்கனவே, பீகாரைச் சேர்ந்த லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், உத்தர பிரதேசத்தை சேர்ந்த முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி ஆதரவு தெரிவித்துள்ளன. பாஜ.வுடன் 30 ஆண்டுகளுக்கு மேல் உறவாடி, மகாராஷ்டிரா ஆட்சி மோதலால் எதிரியாகி விட்ட சிவசேனாவும், மம்தாவுக்கு நேற்று ஆதரவு தெரிவித்துள்ளது. அதோடு, ‘மேற்கு வங்கத்தின் உண்மையான வங்கப் பெண் புலி மம்தாதான்,’ என்று பாராட்டு மழையும் பொழிந்துள்ளது.

* அடேங்கப்பா! ஒரு தொகுதி ரூ.30 கோடியா?

கேரளாவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, தொகுதி பங்கீட்டில் பிரச்னை தொடங்கி விட்டது. தற்போது, இடது ஜனநாயக முன்னணியில் தொகுதி பங்கீட்டு குழப்பம், போஸ்டர் அடித்து ஒட்டும் அளவுக்கு போய்விட்டது. அலுவா, கலமச்சேரி, குன்னத்துநாடு தொகுதிகளை கட்சிக்கு உழைத்தவர்களுக்கு ஒதுக்காமல், தனக்கு வேண்டியவர்களுக்கு தலைமை ஒதுக்கி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் உச்சகட்டமாக, குன்னத்துநாடு தொகுதி ரூ.30 கோடிக்கு பேரம் பேசி விற்கப்பட்டதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரே போஸ்டர் அடித்து ஊரெல்லாம் ஒட்டி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல், கலமச்சேரி, அலுவா தொகுதிகளில் உறுதியாக வெற்றி பெறுவோம் என்று தெரிந்திருந்தும் காங்கிரசுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவருக்கு அலுவா தொகுதியில் `சீட்’ ஒதுக்கப்பட்டு உள்ளதாலும் சிபிஎம் தொண்டர்கள் ஏக அப்செட்டில் இருக்கிறார்கள்.

* அசாம் கள நிலவரத்தை கலவரமாக்கிய பிரியங்கா

தனது 2 நாள் பயணத்தின் மூலம், அசாம் மக்களின் மனங்களை அசைத்து விட்டார் பிரியங்கா. தேயிலை தோட்ட விசிட், மகளிர் சுய உதவிக் குழுக்களுடன் கலந்துரையாடல், இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக போராட்டம், உத்தரவாதமான 5 புதிய அறிவிப்புகள், இந்து வாக்காளர்களை கவரும் வகையில், காமாக்யா தேவி கோயில் வழிபாடு, குடியுரிமை எதிர்ப்பு என்று 2 நாட்களில் பிரியங்கா அடித்தது எல்லாம் சிக்சர். பிரியங்காவின் இதே பாணியையும், வேகத்தையும் காங்கிரஸ் தொடர்ந்தால் ஆளும் கட்சியின் எதிர்ப்பு ஓட்டுகள் மட்டுமின்றி, புதிய ஆதரவு ஓட்டுகளும் காங்கிரசை அரியணையில் அமர வைக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். மாநில காங்கிரஸ் தலைவரான ரிபுன் போரா, ‘பிரியங்காவின் வருகையால் கள நிலவரம் மாறி இருப்பதாக பலரும் கூறுகின்றனர். இதனால், பாஜ கலவரமாகி இருக்கிறது,’ என்று உற்சாகமாக தெரிவித்துள்ளார்.

Related Stories:

>