ஓபிஎஸ் மகன் உசிலை வருகை சிட்டிங் எம்எல்ஏவுக்கு சிக்கல்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் சில தினங்களுக்கு முன் நடந்த ஒரு விழாவிற்கு, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் 2வது மகன் ஜெயபிரதீப் வந்திருந்தார். அவருக்கு உசிலம்பட்டி அதிமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து வரவேற்பு கொடுத்தனர். விழாவில் கலந்து கொண்ட ஜெயபிரதீப்பிடம் உசிலம்பட்டி அதிமுக நகரச் செயலாளர் பூமாராஜா, ‘‘வரும் சட்டமன்றத் தேர்தலில் உசிலம்பட்டியில் நீங்கள் போட்டியிடுங்கள். சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிப்பீர்கள். அதற்கு நாங்கள் பாடுபட தயாராக இருக்கிறோம்’’ என்று சத்தியம் செய்து கொடுத்தார்.

உசிலம்பட்டி சிட்டிங் எம்எல்ஏ நீதிபதி, மீண்டும் சீட் கேட்டு விருப்ப மனு கொடுத்துள்ளார். இந்நிலையில், அதிமுக நகரச்செயலாளர், ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்பை இந்த தொகுதியில் போட்டியிடுமாறு வற்புறுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் உசிலம்பட்டியில் எம்எல்ஏ நீதிபதி மீண்டும் போட்டியிட்டால் அவருக்கு கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டார்கள். உள்ளடி வேலையில் ஈடுபடுவார்கள் என்பது வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. இது சம்பந்தமாக ஜெயபிரதீப்பிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘‘எதுவாக இருந்தாலும் அதிமுக தலைமை எடுக்கும் முடிவுதான்’’ என்றார்.

Related Stories:

>