ஓட்டுக்காக சொன்ன அத்தனையும் காற்றில் பறக்க விட்டு விட்ட எம்எல்ஏ: பெரம்பலூர் (தனி) தொகுதி எம்எல்ஏ இளம்பை தமிழ்செல்வன்; சொன்னாரே! செஞ்சாரா?...

தமிழகத்தின் மையத்திலுள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. அதில், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி தனித்தொகுதியாக உள்ளது. இந்த தொகுதியில் 2 முறையும் அதிமுகவினரே வெற்றி பெற்றுள்ளனர். பெரம்பலூர் தொகுதியில் எம்எல்ஏவாக அதிமுகவை சேர்ந்த இளம்பை தமிழ்செல்வன் உள்ளார். 2016 சட்டமன்ற தேர்தலின்போது இவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் சமூக சமத்துவப்படை கட்சி தலைவரான சிவகாமி ஐஏஎஸ் போட்டியிட்டார். இந்த தொகுதியை பொறுத்தவரை கடந்த 2 தேர்தலிலும் அதிமுகவை சேர்ந்த இளம்பை தமிழ்செல்வனே வெற்றி பெற்று தொடர்ந்து 10 ஆண்டுகளாக எம்எல்ஏவாக உள்ளார்.

2-வது முறையாக வெற்றி பெற்றதும், பெரம்பலூர் தொகுதியை தமிழகத்தின் முதன்மையான தொகுதியாக மாற்றிக்காட்டுவேன். தொகுதி மக்கள் நீங்கள் கேட்பதைவிட, இந்த தொகுதியை பற்றி ஏற்கனவே 5 ஆண்டு அனுபவித்த எனக்கு நன்றாக தெரியும். தொகுதி மக்களுக்கான அனைத்து தேவைகளையும் சட்டமன்றத்தில் பேசி சாதித்துக்காட்டுவேன் என கூறினார். திமுக ஆட்சியில் கொண்டு வந்ததால் ஓரங்கட்டப்பட்டுள்ள மருத்துவ கல்லூரியை பெரம்பலூருக்கு கொண்டு வருவதாக கொடுத்த வாக்குறுதியை எம்எல்ஏ ஆனதும் அப்படியே மறந்து விட்டார். தனிநபர் கழிப்பறைகள் தொகுதிக்குள் பார்க்கும் இடமெங்கும் அப்படியே பயன்பாடின்றி கிடக்கிறது.

குரும்பலூர், வேப்பூர் கல்லூரிகளுக்கு போதிய பஸ் வசதி இல்லை. பால் வண்டியில் மாணவிகளும், பஸ் படிகட்டுகளில் மாணவர்களும் தினம் தினம் தங்களது சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். அரசு தலைமை மருத்துவமனையில் அடிப்படை வசதிகளான கழிப்பிடவசதி, குடிநீர் வசதிகள் கூட செய்து தரப்படவில்லை. ஒழுங்குமுறை விற்பனை கூடம், சின்ன வெங்காய ஏல மையம், அதனை மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக்கும் மையம், உலோக திருமேனிகள் பாதுகாப்பு பெட்டகம், இறைச்சிக்கூடம் என அப்படியே முடங்கி கிடக்கிறது. ‘ஓட்டுக்காக சொன்ன அத்தனையும் ஓட்டு வாங்கியதும் காற்றில் பறக்க விட்டு விட்டார். தொகுதிக்காக சட்டசபையில் பேசுவேன் என்றார். அப்படி பேசியிருந்தால், தேர்தலின் போது எம்எல்ஏ கொடுத்த வாக்குறுதியான பெரம்பலூர் தொகுதியை தமிழகத்தின் முதன்மையான தொகுதியாக மாற்றிக்காட்டியிருப்பார்’ என்கின்றனர் தொகுதி மக்கள்.

* 10 ஆண்டுகளில் பேர் சொல்லும்படி எதுவுமே இல்லை

பெரம்பலூர் திமுக நகர செயலாளர் பிரபாகரன் கூறும்போது, ‘தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனதும் சின்னமுட்லு அணைக்கட்டு திட்டத்தை சட்டமன்றத்தில் பேசி உடனடியாக பெற்றுத்தருவதாக கூறினார். ஆனால் இந்த திட்டம் 10 ஆண்டுகளாக செய்து முடிக்காத நிலையில்தான் உள்ளது. இந்த திட்டம் சாத்தியமா என்ற ஆய்வு பணிக்காக ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கியதை மட்டுமே ஒவ்வொரு மேடையிலும் அணை கட்டியதை போலவே சிட்டிங் எம்எல்ஏ அளந்து வருகிறார். சாகுபடியில் மாநிலத்தில் முதலிடம் பெற்று சாதித்து வரும் பருத்திக்கென நூற்பாலை, மக்காச்சோளத்திற்கென தீவனத் தயாரிப்பு ஆலை என வேலை வாய்ப்புக்கான தொழிற்சாலைகளை தோற்றுவிக்க 10 ஆண்டுகளில் கடுகளவும் முயற்சிக்கவில்லை. 10 ஆண்டுகளில் பேர் சொல்லும்படி சிட்டிங் எம்எல்ஏ எதையும் செய்து சாதிக்கவில்லை’ என்றார்.

* 10 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்கள்

எம்எல்ஏ இளம்பை தமிழ்ச்செல்வன் கூறும்போது, ‘பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூரில் தாலுக்கா கொண்டு வரப்பட்டுள்ளது. வேப்பந்தட்டை, வேப்பூர் ஆகிய 2 இடங்களில் கலைக்கல்லூரிகள், ஆலத்தூரில் ஐடிஐ, விசுவக்குடி அணைக்கட்டு, ரூ.2 கோடியில் சுற்றுலாப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளன. ஆலத்தூர் - செட்டிக்குளம்- செஞ்சேரி இணைப்புச்சாலை, டி.களத்தூர் மண்ணச்சநல்லூர் இணைப்பு சாலை, 6 தடுப்பணைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அரசுத்தலைமை மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே, ரூ.10லட்சத்தில் சின்னமுட்லு அணைக்கான ஆய்வு செய்யப்பட்டுள்ளன. மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு இணையாக பெரம்பலூர் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டது. குரும்பலூர் கல்லூரிக்கு கூடுதல் வகுப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் என பத்து ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன’ என்றார்.

Related Stories: