பாஜவில் ரவுடிகள் இணைந்தால் ‘ஸ்கேன்’ செய்யப்பட்ட பின்பே பதவி: தமிழக பாஜ ஊடகத் துறை தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத்

* அதிமுக-பாஜ தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஏன் இன்னும் உடன்பாடு எட்டவில்லை? இழுபறிக்கு காரணம் என்ன?

இழுபறி என்ற பேச்சுக்கே இடமில்லை. முதல் கட்டமாக மாநில தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், முதல்வர் பழனிசாமியை சந்தித்தார்கள். அப்போது பாஜ போட்டியிடக்கூடிய வலுவான பட்டியல் கொடுக்கப்பட்டது. அடுத்த கட்டமாக மத்திய அமைச்சர் அமித்ஷா ஓபிஎஸ்-இபிஎஸ்சை சந்தித்து, தொகுதி பங்கீட்டுக்கு ஒரு இறுதி வடிவத்தை கொடுத்தார். பாஜவில் தேசிய தலைவர்கள் தான் கூட்டணியை பேச முடியும். இது எங்கள் கட்சியின் நிலைபாடு. அதன் அடிப்படையில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடக்கிறது. தேசிய தலைமையில் விவாதித்து தான் முடிவெடுக்க முடியும். மற்ற கட்சிகளை போன்று எங்கள் கட்சி உடனுக்குடன் முடிவுகளை எடுக்க முடியாது. உரிய முறையில் நாங்கள் எதிர்பார்க்கக்கூடிய தொகுதிகளை கேட்டு பெறுவோம். வெற்றி பெறக்கூடிய தொகுதிகளாகத் தான் அந்த தொகுதிகள் இருக்கும்.

* அமமுகவை கூட்டணியில் சேர்க்க பாஜ இவ்வளவு அக்கறை காட்டுவது ஏன்?

இந்த கூட்டணியில் அமமுகவை சேர்ப்பது என்பது அதிமுக எடுக்க வேண்டிய முடிவு. பாஜவுக்கும், அமமுகவுக்கும் சம்பந்தமில்லை. இது அதிமுகவின் உட்கட்சி பிரச்னை. அதேநேரத்தில் ஒரு வலிமையான கூட்டணி அமைய வேண்டும் என்ற எண்ணம் பாஜவுக்கு இருக்கிறது. எனவே எங்களை பொறுத்தவரை ஒற்றுமையோடு இந்த தேர்தலை சந்தித்தால் ஒரு சிறப்பான சூழ்நிலை ஏற்படும் என்ற எண்ணம் அனைவருக்குமே உள்ளது. ஆனால் நாங்கள் அமமுகவின் விஷயத்தில் தலையிடுவதில்லை. யூகங்கள் அடிப்படையில் சொல்வதில் உண்மையில்லை.

* பாஜகவில் ஏற்கனவே இருந்தவர்களுக்கு இப்போது உரிய மரியாதை தருவதில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளதே?

தமிழக பாஜகவை பொறுத்தவரை இந்திய அளவில் தமிழகத்தில் வளர்ந்து வரக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. புதிதாக ஒவ்வொரு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் சேர்ந்து வருகிறார்கள். மோடியின் திட்டங்களால் ஈர்க்கப்பட்ட பலர் பல்வேறு இயக்கங்களில் இருந்து சேருகின்றனர். அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும் என்பதில் பாஜ உறுதியாக உள்ளது. இதில் புதியவர்கள், பழையவர்கள் என்றெல்லாம் கிடையாது. பாஜ போட்டியிடும் தொகுதிகளில் வெற்றி பெறக்கூடிய நபர்கள் வேட்பாளர்களாக தேர்வு செய்யப்படுவார்கள். அதனால் யாரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள். வெற்றி வாய்ப்புள்ளவர்கள் முன்நிறுத்தப்படுவார்கள்.

* தமிழக பாஜகவை பொறுத்தவரை அதிக அளவில் குற்றவழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் வந்து சேருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதே?

இதில் உண்மை இல்லை. இன்றைக்கு ரவுடிகள் என்று சொன்னாலே, அரசியலில் இதுவரை இருக்கக்கூடிய அனைத்து இயக்கங்களிலும் பல்வேறு கால கட்டங்களில் தேர்தல்களில் அவர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தான் நாம் பார்த்திருக்கிறோம். எங்களை பொறுத்தவரை நேர்மை, உண்மை, ஒழுக்கம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து தான் பதவிகளில் வாய்ப்புகளை தருகிறோம். அதே சமயம் மிஸ்டு கால் கொடுத்து யார் வேண்டுமானாலும் உறுப்பினர் ஆகலாம் என்ற நிலையில், சிலர் பல்வேறு வழக்குகளில் இருந்து சமூக விரோதிகள் என்று அடையாளம் காட்டப்படக்கூடியவர்கள் வந்தால், அவர்களுக்கு உடனடியாக நாங்கள் பதவி கொடுப்பதில்லை. அவர்களை நாங்கள் முழுமையாக ஸ்கேன் செய்து அவர்கள் நடவடிக்கையை கண்காணித்து தான் பதவிகள் கொடுக்கிறோம். அப்படி ஒரு வேளை குற்றமிழைத்தவர் இப்போது நான் திருந்தி வாழ்கிறேன் என்று கூறினால் அவர்களுக்கு நிச்சயம் பாஜ வாய்ப்பளிக்கும். தவறு என்று இருந்தால் அவர் அந்த இடத்தில் இருந்து நீக்கப்படுவார்.

* ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணும்!

ஊராட்சிகளில் கடந்த ஒன்றரை ஆண்டாக எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. 100 நாள் வேலைக்கான நிதியையும் கூட கலெக்டர், திட்ட இயக்குநர்கள் மூலம் திட்டப்பணிகளுக்கு செலவிடப்படுவதால், ஊராட்சிகளுக்கு சம்பளம் தவிர வேறு நிதிகள் எதுவும் ஒதுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு சுவர் விளம்பரங்களை அழிக்கும் செலவு குறித்து, எந்த தேர்தல் வழிகாட்டுதலும் இல்லை என்பதால், ஊராட்சி செயலாளர்களே சுவர் விளம்பர அழிப்பு செலவை பார்த்துக் கொள்ள வேண்டும் என பிடிஓக்கள் கூறிவிட்டனர். இதனால், தர்மபுரி மாவட்டத்தில் இண்டூர் அருகே உள்ள சோமனஅள்ளி ஊராட்சியின் பெயர் பலகையில் உள்ள ஊராட்சி மன்ற தலைவரின் பெயரை, பெயிண்ட் மூலம் அழிக்காமல் செல்லோ டேப் போட்டு ஒட்டி மறைத்துள்ளனர். தேர்தல் முடிந்த பின்னர் செல்லோ டேப்பை அகற்றினால் போதும். அழிக்கும் செலவு மிச்சம் ஆகிறது என்கின்றனர் ஊழியர்கள். இதற்கு பெயர் தான் ஈயம் பூசுன  மாதிரியும் இருக்கணும், பூசாத மாதிரியும் இருக்கணும் என பொதுமக்கள் கிண்டலடிக்கிறார்கள்.

Related Stories: