தேர்தல் விதி அமல் எதிரொலி போலீசார் தனியாக ரோந்து போனால் சஸ்பெண்ட்

சட்டப்பேரவை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், போலீசார் தனித்து ரோந்து சென்றால் சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இவர்கள் வீடியோ பதிவுடன் வாகன சோதனையில் ஈடுபட்டு ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச்செல்லும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதுதவிர போலீசாரும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக- ஆந்திர எல்லைகளில் தினமும் 8 மணி நேரம் வீதம் துப்பாக்கி ஏந்திய 3 போலீஸ் குழுக்கள் சுழற்சி முறையில், 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட தொடங்கியுள்ளனர். மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இரவு நேரத்தில் போலீசார் யாராவது தனியாக ரோந்து சென்றால் சஸ்பெண்ட் நடவடிக்கை பாயும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘‘இரவு நேரத்தில் எஸ்ஐக்கள் தனியாக ரோந்து செல்லக்கூடாது என்பது விதி. போலீசார் சட்டவிரோத செயல்களுக்கு துணை போவதை தடுக்கவும், பாதுகாப்பு கருதியும் இதுபோன்ற விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது. ஆனாலும் ஒரு சிலர் தனியாக ரோந்து செல்வதாக புகார்கள் வருகிறது. யாராவது தனியாக ரோந்து செல்வது தெரிய வந்தால், சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும். எஸ்ஐக்கள் போலீசாரை ரோந்து பணிக்கு உடன் அழைத்து செல்ல வேண்டும். அதேபோல், போலீசார் யாரும் எஸ்ஐக்கள் உட்பட உயர் அதிகாரிகள் இல்லாமல் தனியாக வாகன சோதனை நடத்தக்கூடாது. இதுகுறித்தும் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

Related Stories:

>