நாணயவியல் அறிஞர் பத்திரிகை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி காலமானார்

சென்னை: நாணவியல் அறிஞரும், தினமலர் முன்னாள் ஆசிரியருமான ஆர்.கிருஷ்ணமூர்த்தி நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு இயக்கத்தினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தினமலர் முன்னாள் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி (88), ஒரு நாணயவியல் அறிஞர். இவர், சங்க காலத்தில் பழந்தமிழ் மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள் பலவற்றை கண்டுபிடித்தவர். அது தொடர்பாக பல ஆய்வுகளையும் செய்துள்ளார். கணினி பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் தமிழ் எழுத்துருக்களை உருவாக்கியவர் என்ற பெருமையையும் கொண்டவர்.

தமிழ் செம்மொழி என்ற தகுதியை பெற, இவரது நாணயவியல் கண்டுபிடிப்புகளை தமிழக அரசு முக்கிய வரலாற்று ஆதாரமாக சமர்ப்பித்தது. தமிழுக்கு இவர் செய்த நற்பணியை பாராட்டி 2012-13ம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது குடியரசு தலைவரால் வழங்கப்பட்டது. இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டன் ராயல் நாணயவியல் கழகம் இவரை கவுரவப்படுத்தி, கவுரவ உறுப்பினராக அங்கீகரித்துள்ளது. சங்ககால நாணயங்களைத் தேடி கண்டுபிடித்து, ஆராய்ந்து, தமிழர் நாகரிக வரலாற்றுத் தொன்மையை நிறுவியவர்.

தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் இரண்டாவது மகனான இவர் 1933ம் ஆண்டு நாகர்கோவில் அருகே உள்ள வடிவீஸ்வரம் கிராமத்தில் பிறந்தவர். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை காலமானார். தினமலர் முன்னாள் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: