சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்த 8,200 பேரிடம் ஒரே நாளில் நேர்காணல் நடத்தி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் சாதனை: பொதுக்கூட்டம் போல் நடத்தியதால் தொண்டர்கள் அதிருப்தி

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்த 8,200 பேரிடம் ஒரே நாளில் நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டதால், கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. 500 பேரை அமர வைத்து நடத்துவது நேர்காணலா அல்லது அதிமுக பொதுக்கூட்டமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 6ம்தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் 12ம் தேதி நடைபெறுகிறது. எனவே, தமிழகம், கேரளா, புதுச்சேரியில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து கடந்த 24ம் தேதி முதல் மார்ச் 5ம் தேதி வரை விருப்ப மனு வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், விருப்ப மனு வாங்கும் தேதியை மார்ச் 3ம்தேதியாக குறைத்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட மொத்தம் 8,174 பேர் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் மட்டும் 8,000 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 3 மாநிலங்களிலும் விருப்ப மனு தாக்கல் செய்த சுமார் 8,200 பேரிடமும் ஒட்டுமொத்தமாக 4ம் தேதி (நேற்று) ஒரே நாளில் நேர்காணல் நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்தது.

அதன்படி நேற்று காலை 9 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேர்காணல் தொடங்கியது. நேர்காணலில் பங்கேற்ற சுமார் 8,200 பேரும்  காலை 8 மணியில் இருந்தே ராயப்பேட்டை அலுவலகத்துக்கு வர தொடங்கினர். காலை 9 மணி முதல் நேர்காணல் தொடங்கியது. நேர்காணலுக்கு ஒரே நாளில் 8 ஆயிரம் பேர் குவிந்ததால், அதிமுக அலுவலகம் இருக்கக்கூடிய லாயிட்ஸ் சாலை இரண்டு பக்கமும் பேரிகார்டுகள் வைத்து போக்குவரத்து தடை செய்யப்பட்டது. 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காலை 9 மணிக்கு அதிமுக ஆட்சி மன்ற குழுவில் இடம் பெற்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், வேணுகோபால், தமிழ் மகன் உசேன் ஆகியோர் முன்னிலையில் நேர்காணல் தொடங்கியது. முதலாவதாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்துக்கு விருப்ப மனு தாக்கல் செய்தவர்கள் நேர்காணலுக்கு மொத்தமாக அழைக்கப்பட்டனர். ஒரிஜினல் ரசீது இருந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் முகக்கவசம் அணிய வேண்டும், செல்போன் கொண்டு செல்லக்கூடாது என கடுமையாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட 6 மாவட்டங்களை சேர்ந்தசுமார் 500 முதல் 600 பேர் வரை இடம் பெற்றிருந்தனர். இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் அமர வைக்கப்பட்டனர். நேர்காணலுக்கு வந்தவர்கள் மத்தியில், முதல்வர் எடப்பாடி பேசும்போது, ‘‘வந்திருக்கும் எல்லோரும் போட்டியிட தகுதி உள்ளவர்கள் தான். ஆனால் ஒரு தொகுதியில் போட்டியிட ஒருவருக்கு தான் சீட் வழங்க முடியும். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்க வேண்டியதுள்ளது. அந்த தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை நிறுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும்.

எனவே கட்சி தலைமை ஆலோசனை நடத்தி அதிமுக போட்டியிடும் தொகுதிகளில், தகுதியுள்ள ஒருவருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும். அதனால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் அதிமுக தலைமை அறிவிக்கும் வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக உழைக்க வேண்டும், எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட கனவை நிறைவேற்ற வேண்டும்’’ என்றார். இதே கருத்தை வலியுறுத்தி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பேசினார்.

10 நிமிடத்தில் 5 அல்லது 6 மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 5 மாவட்டத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் நேர்காணலில் கலந்து கொண்டனர்.

2வது குழுவாக தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கு போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. இப்படி ஒவ்வொரு சுற்றிலும் சுமார் 5 முதல் 6 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, 10 நிமிடங்களில் அதே டயலாக்கை பேசி அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் நேர்காணலுக்கு சென்று வந்தவர்கள், ‘‘எனக்கு சீட் உறுதியாகிவிட்டது’’ என்று கிண்டலாக பேசிக் கொண்டே வெளியில் வந்தனர். ஒரு சிலர், ‘‘ஜெயலலிதாக இருக்கும்போது 5 நாள் வரை நேர்காணல் நடைபெறும்.

அப்போது தொகுதியில் உள்ள பிரச்னைகள் குறித்தும், அதிமுக நடத்திய எத்தனை போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறீர்கள், போட்டியிட சீட் கொடுத்தால் எப்படி வெற்றி பெறுவீர்கள் உள்ளிட்ட கேள்விகளை எல்லாம் கேட்பார். ஒவ்வொருவரிடமும் தனித் தனியாக பேசுவார். ஆனால் இவர்கள் ஒரே நேரத்தில் 6 மாவட்டங்களை அழைத்து வெறும் கண்துடைப்புக்காக நேர்காணலை நடத்துகின்றனர். ஏற்கனவே பட்டியலை ரெடி பண்ணி வைத்து விட்டு பொதுக்கூட்டம் போல் நேர்காணலை நடத்துகின்றனர்’’ என்று ஆவேசப்பட்டனர். இந்த நேர்காணலால் அதிமுக அலுவலகம் இருக்கக்கூடிய பகுதிகள் அனைத்திலும் அதிமுக கரை வேட்டிக்கார்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. நேற்று மதியம் வரை 39 அதிமுக மாவட்டத்தினரிடம், மதியம் 4 மணிக்கு மேல் 34 மாவட்டத்தினரிடம், அதைத்தொடர்ந்து புதுச்சேரி, கேரளா மாநிலத்தில் இருந்து விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டது. அதிமுக நேர்காணல் நேற்று இரவு 9 மணி வரை நீடித்தது.

* 3ல் ஒரு பங்காக விருப்ப மனு குறைந்தது

தமிழகத்தில் 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது அதிமுக சார்பில் சுமார் 25 ஆயிரம் பேர் விருப்ப மனு தாக்கல் செய்து இருந்தனர். தற்போது, 2021ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட 8,174 பேர் மட்டுமே விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். இது கடந்த தேர்தலை காட்டிலும் 3ல் ஒரு பகுதி மட்டுமே. தமிழகத்தில் ஆளுங்கட்சியாக அதிமுக இருந்தும், அதிமுக நிர்வாகிகளிடம் விருப்ப மனு தாக்கல் செய்ய ஆர்வம் இல்லை என்று கூறப்படுகிறது. 2016ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் சட்டமன்ற பொதுத்தேர்தலை அதிமுக சந்தித்தது. அதனால் அதிகம் பேர் விருப்ப மனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டினர். தற்போது, கட்சியில் ஒற்றுமை இல்லை. எதற்கெடுத்தாலும் தங்கமணி, வேலுமணியை முதல்வர் எடப்பாடி முன்னிலைப்படுத்துவதை அதிமுக நிர்வாகிகள் அதிகம் பேர் விரும்பவில்லை.

Related Stories: