‘வழக்குபதிந்து விசாரிக்கலாம்; மனு தள்ளுபடி’ ராஜேந்திர பாலாஜி சொத்துகுவிப்பு இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு: 3வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரை

மதுரை: பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில், இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் 3வது நீதிபதியின் விசாரணைக்காக தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மதுரை, தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன், கடந்த 2014ல் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். அவர் திருத்தங்கல்லில் வாங்கியுள்ள சொத்துக்களின் அசல் சந்தை மதிப்பு ரூ.7 கோடிக்கும் அதிகம். ஆனால், வெறும் ரூ.1.15 கோடிக்கு வாங்கியுள்ளதாக கணக்கில் காட்டியுள்ளார்.

எனவே, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்றம் தலையிட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 1996ல் திருத்தங்கல் பேரூராட்சி தலைவராக இருந்தது முதல் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பிக்கு உத்தரவிட்டிருந்தனர்.

இந்த மனு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் ஆஜராகி, ‘‘ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான புகாரின் மீது விசாரணை நடத்தப்பட்டது. அதில் குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. எனவே, இதன் மீது மேல் விசாரணை நடத்த தேவையில்லை என முடிவுக்கு வந்ததால், புகாரின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தேவையில்லை எனவும், புகாரை முடித்தும் பொதுத்துறை தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது’’ என வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தனர். இந்த மனுவின் மீது நீதிபதிகள் எம்.சத்யநராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் நேற்று தீர்ப்பளித்தனர். முதலில் தீர்ப்பை வாசித்த நீதிபதி எம்.சத்யநாராயணன், ‘‘அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் முகாந்திரம் இருப்பதால், லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிந்து, ஆளுநரின் ஒப்புதல் பெற்று விசாரிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டார்.

அடுத்து தீர்ப்பை வாசித்த நீதிபதி ஆர்.ஹேமலதா, ‘‘மனுதாரரின் புகாரின் மீது போதிய முகாந்திரம் இல்லை என முடிவுக்கு வந்துள்ளனர். எனவே, நீண்டகால இடைவெளிக்கு பிறகு வழக்குப்பதிந்து விசாரிப்பதால் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை. அவ்வாறு செய்தால் இறந்த குதிரையின் மீது சவாரி செய்வதைப்போல ஆகிவிடும். எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என தீர்ப்பளித்தார். இரு நீதிபதிகளிடையே மாறுபட்ட தீர்ப்பு கிடைத்ததால், இந்த மனுவின் மீது மூன்றாவதாக ஒரு நீதிபதியின் கருத்தை கேட்டு உரிய முடிவெடுக்கும் வகையில் வழக்கை தலைமை நீதிபதியின் கவனத்திற்கு அனுப்பி வைத்தும் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: