வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக புகார் தமிழகம் முழுவதும் பிரபல நகைக்கடைக்கு சொந்தமான 25 இடங்களில் ஐடி ரெய்டு: பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின

சென்னை: வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக வந்த புகாரை தொடர்ந்து பிரபல நகைக்கடைக்கு சொந்தமான தமிழகம் முழுவதும் உள்ள 25 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் தங்கம் வாங்கியதில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்டு பிரபல நகைக்கடை இயங்கி வருகிறது.  ஒரு நாளைக்கு பல கோடி ரூபாய்க்கு நகைகள் விற்பனையாகி வருகிறது. சென்னையில் 4 கடைகள் உட்பட தமிழகம் முழுவதும் 15 கிளைகளுடன் இயங்கி வருகிறது.

இந்த நகைக்கடையின் தலைமை அலுவலகம் சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள - கடைக்கு இங்கிருந்து தான் தங்கம் மற்றும் வைர நகைகள் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் நகைக் கடைக்கு தங்கம் இறக்குமதி செய்ததில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், நகைக்கடையில் விற்பனை செய்யப்படும் நகைகளுக்கு இரண்டு விதமான கணக்குகள் பராமரித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் பல நூறு கோடி ரூபாய் மத்திய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்படுகிறது.

அதைதொடர்ந்து நேற்று மதியம் நகைக்கடைக்கு சொந்தமான 15 நகைக்கடைகள், உரிமையாளர் வீடு மற்றும் அலுவலகம் என 25 இடங்களில் ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது நகைக்கடையில் இருந்து வாடிக்கையாளர்களை மட்டும் வெளியேற்றி விட்டு கடையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் மேலாளர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. ஊழியர்களிடம் இருந்து செல்போன்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் நகைக்கடையில் உள்ள தொலைபேசி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டது.

நேற்று நள்ளிரவு வரை நடந்த இந்த அதிரடி சோதனையில், 2019-20 மற்றும் 2020-21ம் ஆண்டுக்கான கணக்கு வழக்கு ஆய்வு செய்யப்பட்டது. இறக்கு மதி செய்யப்பட்ட தங்கம் எவ்வளவு, அதன் மதிப்பு எவ்வளவு, விற்பனை செய்யப்பட்ட மொத்த தங்கம் எவ்வளவு வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டிய விவரங்கள் குறித்த ஆவணங்களை அனைத்தையும் கைப்பற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் உரிமையாளர் மற்றும் மேலாளர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த சோதனையில் பல நூறு கோடி மதிப்புள்ள ஆவணங்கள் மற்றும் வெளிநாடுகளில் வாங்கப்பட்டுள்ள சொத்து ஆவணங்களும் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சோதனை இன்றும் நடைபெறும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட மொத்த தங்கம் மற்றும் வைரம் சொத்துக்கள் குறித்து கணக்காய்வு செய்த பிறகு தான் மொத்தம் எவ்வளவு கோடி ரூபாய் மத்திய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது என்று தெரிய வரும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்தல் நேரத்தில் பிரபல நகைக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய வரும் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>