‘தலைமை’யால் வந்த இந்த பரிதாப நிலைமை சரிவை நோக்கி நடைபோடும் தமிழகம் கடன், பற்றாக்குறையால் படுமோசம்

‘சொக்கா ஆயிரம் பொன்னாச்சே...’ என்று, திருவிளையாடலில் பாண்டிய மன்னனின் சந்தேகத்தை தீர்க்கும் கவிதையை தேடி அலைந்த தருமியை தெரியாதவர்களே இருக்க முடியாது. மண்டபத்தில் சொக்கநாதரே கொடுத்ததாக கூறப்படும் அந்தப் பாடலால் பாண்டிய மன்னனுக்கு சந்தேகம் தீர்ந்ததோ என்னவோ, நக்கீரருக்கு தீரவில்லை. ‘பாட்டை எழுதியது நீர்தானே...’ என்பதுதான் அந்த டவுட்டு. இதே சந்தேகம், தமிழக மக்களுக்கும் எழாமல் இல்லை. ஏனெனில், முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது மறைவுக்கு பிறகு பொறுப்பேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில், 10 ஆண்டில் 11 முறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற பெருமைக்குரிய ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட் தயாரிப்பில் நிதிப்பற்றாக்குறை அதிகரிப்பால் ஒவ்வொரு தமிழக மக்களின் தலையிலும் இறக்கி வைத்த சுமையும் அப்படி. மண்டபத்தில் எழுதிக்கொடுத்ததா அல்லது மண்டையை குடைந்து தயாரித்ததா என்ற குழப்பத்தில் மக்கள் ஆழ்ந்துள்ளனர்.

வளர்ச்சி... சீரான நல்லாட்சியின் அடையாளம் இது. கொரோனா ஊரடங்கின்போது கூட மகாராஷ்டிரா சுமார் 1.3 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்துள்ளது. இதற்கான ஒப்பந்தங்கள் கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் சில மாநிலங்கள், தங்கள் மாநில வளர்ச்சிக்காகவும், உள்கட்டமைப்பு மேம்படவும், மக்களுக்கு வேலை வாய்ப்பு, தொழில் வாய்ப்புகள் பெருகவும் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள், திட்டங்கள் அமல்படுத்தி வருகின்றன. பேரிடர் வந்த போதும் மாநிலத்தை தூக்கி நிறுத்தியதற்கு காரணம், அந்த மாநில அரசுகள் வகுத்த திட்டங்களும், உத்திகளும்தான்.

alignment=

நாட்டு மக்களின் உயர்வுக்கும் இதுவே வழி வகுக்கும். ஆனால், தமிழகத்தில் விதி விலக்காக, தமிழக மக்களின் தலையில் கடன் சுமை உயர்ந்து கொண்டே செல்கிறது. காரணம், தமிழக அரசுதான் என்பது கசப்பான உண்மை. இதனால், ஒவ்வொருவர் தலையிலும் ரூ.79,000 கடன் சுமை ஏற்பட்டுள்ளது.பேரிடர் தருணங்களை தமிழகம் இதற்கு முன்பாகவும் சந்தித்துள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, 2008-09 ஆம் நிதியாண்டில் உலக அளவில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதே ஆட்சிக்காலத்தில்தான் 6வது ஊதியக்குழு நடைமுறைப்படுத்தப்பட்டது. அப்போதெல்லாம் மக்கள் நல திட்டங்களுக்கு எந்த வகையிலும் குறைவில்லை.  

2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு அமைந்த பிறகு இருந்ததை விட படு மோசமாக, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுகளால் படு பரிதாப நிலையை நோக்கி செல்ல தொடங்கி விட்டது என்பது பல வகையிலும் கண்கூடாக தெரிய தொடங்கியது. திட்டமிடல், நிர்வாக திறன் இல்லை என்று மக்களே விமர்சிக்கும் அளவுக்கு ஆனதுதான் மிகவும் பரிதாபம். 2011ல் ஆட்சிக்கு வந்த பிறகு 5 ஆண்டுகளின் இறுதியில்தான், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மீண்டும் 2016ம் ஆண்டு அதிமுக ஆட்சியை தக்க வைத்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த ஓராண்டு கடந்த நிலையில், கடந்த 2016ம்ஆண்டு ஜெயலலிதா இறந்ததும், ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார். பின்னர், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.

alignment=

இந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் நிலை மிகவும் பரிதாப நிலைக்கு சென்று விட்டது என்பதை புள்ளிவிவரங்கள் நிரூபிக்கின்றன. அதாவது, கடந்த 2010-11 நிதியாண்டில் தமிழகத்தின் நிதிப்பற்றாக்குறை ரூ.16,646 கோடி. இது ஒவ்வோர் ஆண்டும் பூதாகரமாக வளர்ந்து, தற்போது ரூ.96,889 கோடியை எட்டியிருக்கிறது. கடந்த 2010-2011ம் ஆண்டில் ரூ.16,646 கோடியாக இருந்த பற்றாக்குறை, 2011-12 நிதியாண்டில் ரூ.17,274 கோடியாகவும், 2013-14 நிதியாண்டில் ரூ.20,583 கோடியாகவும், 2014-15ல் ரூ.25,714 கோடியாகவும் உயர்ந்தது. 2016-17 பட்ஜெட்டில் நிதிப்பற்றாக்குறை ரூ.61,341 கோடியை எட்டி பதைபதைப்பை ஏற்படுத்தியது. பின்னர், 2017-18 நிதியாண்டில் ரூ.41,977 கோடியாகவும், 2018-19 நிதியாண்டில் ரூ.44,480 கோடியாகவும் நிதிப்பற்றாக்குறை இருந்தது. ஆனால், மீண்டும் 2019-20 நிதியாண்டில் இந்த பற்றாக்குறை ரூ.55,058 கோடியானது. 2020-21 நிதியாண்டில் இது ₹96,889 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உற்பத்தி துறைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், தொழில்துறை மேம்பாட்டுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு திட்டங்கள் பலன் அளிக்கவில்லை. மாறாக, அரசின் பல்வேறு நடவடிக்கைகள், தொழில்துறைகள் தமிழகத்தில் இருந்து வெளியேறவும், மக்கள் வேலை இழப்புக்கும் காரணம் ஆகிவிட்டது. இதை சரிசெய்து மீண்டும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் இல்லாமலேயே போய்விட்டது என்கின்றனர் நிபுணர்கள். கடந்த 2012-13 நிதியாண்டுக்கு பிறகு, மாநிலத்தின் நிதிநிலை குறியீடுகள் சரிவுடனேயே காணப்படுகின்றன. அதாவது, நிதிப்பற்றாக்குறையில் வருவாய் பற்றாக்குறையின் பங்களிப்பு 50 சதவீதத்தை எட்டிவிட்டது என்று சில ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

alignment=

* விவசாயம்தானே முக்கியம் இதில் காட்டலாமா அலட்சியம்?

கொரோனா காலக்கட்டத்திலும் நாட்டின் பொருளாதாரத்துக்கு கைகொடுத்தது விவசாயம்தான். இதனால்தான் விவசாயத்தை சார்ந்துள்ள மாநிலங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. இவ்வளவு ஏன்? நகரங்களில் ஊரடங்கால் வேலை இழந்தவர்களுக்கு இந்த துறைதான் கைகொடுத்தது. கடந்த 2015-20 காலக்கட்டத்தில் விவசாய மேம்பாடுகளுக்கு பட்ஜெட்டில் தமிழகம் ஒதுக்கீடு செய்தது, 6.2 சதவீதம்தான். இதுதேசிய சராசரியான 6.4 சதவீதத்தை விட குறைவு. விவசாய மேம்பாட்டுக்கு உதவும் பாசன வசதி மற்றும் வெள்ளகட்டுப்பாட்டுக்கும் நிதி குறைவுதான். இப்படி சராசரிக்கும் குறைவான நிதியை ஒதுக்கிவிட்டு, தன்னை விவசாயியாக தமிழக முதல்வர் காட்டிக்கொள்வது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

* நஷ்டத்தில் தமிழக பொதுத்துறை நிறுவனங்கள்

பொதுத்துறை நிறுவனங்கள் பலவும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. சமீபத்திய புள்ளி விவரத்தின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள அரசு பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.78,854.25 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளன என்பது தெரிய வந்துள்ளது. சரியான நிர்வாகமின்மை, நிதி ஒதுக்கீட்டில் கவனமின்மை போன்ற காரணங்களால் பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

* ஒதுக்கீடு சராசரிக்கும் குறைவு எப்படி கிடைக்கும் தன்னிறைவு

கடந்த 2015-2020 இடையே அதிமுக ஆட்சிக்காலத்தில் பல்வேறு மாநிலங்கள் முக்கிய துறைகள் மற்றும் மக்கள் மேம்பாட்டுக்கு பட்ஜெட்டில் கணிசமான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளன. ஆனால் இந்த காலக்கட்டத்தில், மொத்தம் உள்ள 13 முக்கிய துறைகளில் 10 துறைகளுக்கு தமிழகம் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்தது மிகவும் குறைவுதான். தமிழக அரசு பட்ஜெட்டில் துறைவாரியாக ஒதுக்கீடு செய்த நிதி ஒதுக்கீடு (சதவீதத்தில்) வருமாறு: (அடைப்புக்குறிக்குள் தேசிய சராசரி பட்ஜெட் ஒதுக்கீடு, சதவீதத்தில்)

* வெள்ளத்தை நாங்க மறக்கல நிதியை நீங்க ஏன் ஒதுக்கல?

தமிழகத்தில் மழை வந்தாலே பல பகுதிகள் குளம்போல காட்சியளிக்கும். சென்னை அவலம்பற்றி சொல்லவே தேவையில்லை. கடந்த 2015ம் ஆண்டு வெள்ளம் மறக்க முடியாத வடுவை ஏற்படுத்திவிட்டது. கடந்த 2015-2021 இடையிலான காலக்கட்டத்தில் வெள்ள கட்டுப்பாடு மற்றும் பாசன வசதிக்காக தெலங்கானா மட்டுமே அதிகமாக செலவு செய்துள்ளது. அதாவது மேற்கண்ட காலக்கட்டத்தில் மாநிலங்கள் சராசரியாக 4 சதவீதம் ஒதுக்கீடு செய்துள்ளன.இதில் தெலங்கானா கடந்த 2015-20 காலக்கட்டத்தில் பாசன வசதி மற்றும் வெள்ள கட்டுப்பாட்டுக்காக பட்ஜெட்டில் 10.8 சதவீதம் செலவு செய்துள்ளது. ஒடிசா 8.3 சதவீதம், ஆந்திரா 7.6 சதவீதம் என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை பாசன வசதி மற்றும் வெள்ள கட்டுப்பாட்டுக்காக 1.8 சதவீதம் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இது தேசிய சராசரியான 4 சதவீதத்தில் பாதிகூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* 17.2%ல் இருந்து 22.6% வளர்ச்சியல்ல... பற்றாக்குறை

கடந்த 20112-13 நிதியாண்டு முதல் 2018-19 நிதியாண்டு வரையிலான ஆய்வறிக்கையின்படி, தமிழகம் வருவாய் உபரியில் இருந்து வருவாய் பற்றாக்குறையை நோக்கி நகர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. மாநில ஜிடிபியில் கடன் விகிதம் கடந்த 2012-13ல் 17.2 சதவீதமாக இருந்தது, 2018-19ல் 22.6% ஆக உயர்ந்துள்ளது. இதுமட்டுமின்றி, வருவாய் பற்றாக்குறைக்கும் நிதிப்பற்றாக்குறைக்கும் இடையிலான விகிதாசாரம், 50 சதவீதத்தை நெருங்கியுள்ளது என சமீபத்தில் வெளியான 15வது நிதிக்கமிஷன் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கடனில் பெரும்பகுதி, வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்டவே செலவிடப்படுவதை இது குறிப்பிடுகிறது.

* இப்படி இருந்தால் எப்படி வளரும்…?

நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான அளவுக்கு மூலதன செலவினங்கள் அமைய வேண்டும். நாட்டின் அல்லது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இதன்பங்களிப்பு கணிசமாக இருக்க வேண்டும். ஆனால்,கடந்த 2006-2011ம் ஆண்டு வரை நடந்த திமுக ஆட்சியில், மூலதன செலவினங்கள் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.33 சதவீதமாக இருந்தது. இது கடந்த 10ஆண்டுகளில்ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் 2.05 சதவீதமாகவும், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் வெறும் 1.57 சதவீதமாகவும்சரிந்து விட்டது.

மூலதன செலவினங்களுக்கே நிதி போதுமான அளவு ஒதுக்கீடு செய்யாவிட்டால், தமிழகத்தின் வளர்ச்சி எப்படி சாத்தியமாகும் என பொருளாதார மற்றும் தொழில்துறை வல்லுநர்கள் கேள்வி எழுப்புகின்றனர். 15வது நிதிக்குழு அறிக்கைப்படி கடந்த 2005 -2011க்கு இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சி 10.9 சதவீதமாக இருந்தது. இது ஏறக்குறைய பாதிக்கும் மேல்சரிந்து 4.6 சதவீதமாக ஆகிவிட்டது. கட்டுமானம் மற்றும் உற்பத்தித்துறை சரிவே இதற்கு முக்கிய காரணம் என்பதை சில ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

* கடன் வாங்கி செலவு நிதி நிர்வாக சீர்குலைவு

நிதி நிர்வாகத்தில் சீர்கேடு காரணமாக, தமிழக மக்கள் ஒவ்வொருவர் தலையிலும் ரூ.79,000 கடன் சுமையை இறக்கி வைத்திருக்கிறது தமிழக அரசு. கடந்த 2011ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி பதவியேற்றபோது, தமிழகத்தின் மொத்த கடன் சுமையே சுமார் ரூ.1 லட்சம் கோடிதான். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் மின் கட்டணம், பால்விலை, பஸ் கட்டணம், சொத்து வரி என ஏகத்துக்கு வரியையும் கட்டணத்தையும் உயர்த்தியும் கடன் வாங்கி செலவு செய்ய வேண்டிய நிலைக்கு நிதி நிர்வாகம் படு மோசமாகி விட்டது. இதன் விவரம்: 2011 ஏப்ரலில் திமுக ஆட்சி முடியும்போது கடன் சுமை ரூ.1,02,439 கோடிதான். இது 2020-21 நிதியாண்டில் ரூ.4,85,502 கோடியாக அதிகரித்துள்ளது.

* ரங்கராஜன் குழு அறிக்கையின் நிலை என்ன?

கொரோனா பரவல் காரணமாக மாநிலத்தின் பொருளாதாரம் கடும் பாதிப்பை சந்தித்த நிலையில், மாநிலத்தை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் தொடர்பாக, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரங்கராஜன் தலைமையில் நிபுணர் குழுவை தமிழக அரசு கடந்த மே மாதம் அமைத்தது. இந்தக்குழ, கடந்த ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி, முதல்வரிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவையான செலவினங்கள், தொழில் வளர்ச்சி திட்டங்களுக்கு ஊக்கம் அளிப்பது போன்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இந்த இறுதி அறிக்கை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவே இல்லை. இதன்மூலம், பல்துறை வல்லுநர்கள் கொண்ட குழுவை ஏற்படுத்துவதற்கு மாறாக, மூத்த அரசு அதிகாரிகள் குழுவை அமைத்ததன் மூலம், இந்த அறிக்கையில் வெளிப்படையான கருத்துக்கள் எப்படி இடம்பெற்றிருக்க முடியும் என்ற சந்தேகமும் மக்களிடையே எழுந்துள்ளது.

Related Stories: