நலவாழ்வு முகாமில் கவனிக்க பாகன்கள் இல்லாததால் ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார் கோயில் யானை திருப்பி அனுப்பப்பட்டது

மேட்டுப்பாளையம்: யானைகள் நலவாழ்வு முகாமில் கவனிக்க ஆளில்லாததால் ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார் கோயில் யானையை திருப்பி அனுப்ப்பட்டது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் கடந்த மாதம் 8ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இம்முகாமில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கோயில்கள் மற்றும் மடங்களை சேர்ந்த 26 யானைகள் கலந்து கொண்டுள்ளன.இதில், ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார் கோயிலுக்கு சொந்தமான ஜெயமால்யதா என்ற யானையும் கலந்து கொண்டுள்ளது. கடந்த 20ம் தேதி யானை ஜெயமால்யதாவை பாகன் ராஜா என்ற வினில்குமார், உதவி பாகன் சிவ பிரசாத் ஆகியோர் பிரம்பால் அடித்து துன்புறுத்தினர்.

இது தொடர்பாக, கோயில் நிர்வாகம் புகார் தெரிவித்ததன்பேரில் வினில்குமாரை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. பாகன்கள் 2 பேரும் வனத்துறை சார்பில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து ஜெயமால்யதாவை, திருச்செந்தூர் கோயில் யானையுடன் வந்த உதவியாளர் சுப்ரமணி தற்காலிகமாக பராமரித்து வருகிறார். ஜெயமால்யதாவை அடித்து துன்புறுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பாகன்கள் 2 பேருக்கும் மேட்டுப்பாளையம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. இந்நிலையில், சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சார்பில் தலைமையிட இணை கமிஷனர், கோவை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: கடந்த மாதம் 22ம் தேதி இரவு ஜெயமால்யதா யானையை மருத்துவ குழுவினர் பார்வையிட்டனர். அப்போது, பாகன்கள் இல்லாமல் யானையின் குண அம்சங்கள் மாற வாய்ப்புள்ளது. இது முகாமில் உள்ள மற்ற யானைகளுக்கும், அலுவலர்களுக்கும் பாதுகாப்பானது இல்லை. ஆகவே, முகாமில் இருக்கும் ஜெயமால்யதாவை ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார் கோயிலுக்கு திரும்ப அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார். இதையடுத்து, வனத்துறைக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து முகாமில் உள்ள ஜெயமால்யதாவை ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார் கோயிலுக்கு  அதிகாரிகள்  இன்று அதிகாலை திருப்பி அனுப்பி வைத்தனர்.

Related Stories: