அதிகாரியின் பெயரை கூறியதால் ஆவணமின்றி பறிமுதல் செய்யப்பட்ட ரூ.61 ஆயிரம் பெண்ணிடம் ஒப்படைப்பு

வந்தவாசி: வந்தவாசி- திண்டிவனம் நெடுஞ்சாலை எஸ்.காட்டேரி கிராமம் அருகே நேற்று, தாசில்தார் சுதாகர் தலைமையில் பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புதுவையில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் இருந்த ஜெயந்தி என்பவரிடம் ரூ.61 ஆயிரம் ரொக்கம் இருந்தது. விசாரணையில், ஜெயந்தி ‘தனது உறவினருக்கு உடல் நிலை சரியில்லாமல் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மருத்துவ செலவிற்காக பணத்தை எடுத்து செல்கிறேன்’ என கூறினார். ஆனால், உரிய ஆவணம் எதுவும் அவரிடம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து, வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் திருநாவுக்கரசிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து ஜெயந்தி, தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாலட்சுமியிடம் சென்று நடந்த விபரங்களை எடுத்துக் கூறினார். அப்போது, ஜெயந்தி காஞ்சிபுரத்தில் உள்ள தனக்கு தெரிந்த அதிகாரி ஒருவரது பெயரையும் சொல்லியதாக தெரிகிறது. இதனால் தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாலட்சுமி,  ஆவணங்கள் ஜெயந்தியிடம் உள்ளதா என விசாரித்து பணத்தை ஒப்படைக்கும்படி தேர்தல் பிரிவு மண்டல தாசில்தார் அகத்தீஸ்வரனுக்கு உத்தரவிட்டார். ஆனால், ஜெயந்தி பணத்திற்கான எந்த ஆவணமும் கொடுக்காத நிலையில், ரூ.61 ஆயிரத்தை அதிகாரிகள் அவரிடம் ஒப்படைத்துவிட்டனர். உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்த பணத்தை, அதிகாரி ஒருவரது பெயரை சொல்லியதும் திரும்ப ஒப்படைத்த சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

Related Stories: