செம்பரம்பாக்கம் ஏரியில் அதிகரிக்கும் உயிர்ப்பலிகள்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

குன்றத்தூர்: செம்பரம்பாக்கம் ஏரியில் நாளுக்கு நாள் உயிர்ப்பலிகள் அதிகரித்து வருகின்றன. இவற்றை தடுக்க வேண்டிய பொதுப்பணி துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் ஏரிகளில் செம்பரம்பாக்கம் ஏரி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மழைக்காலங்களில் சென்னை புறநகர் பகுதிகளில் அதிகளவு பெய்யும் மழைநீர் இங்கு சேமித்து, கோடை காலத்தில் மக்களுக்கு குடிநீராக வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் அதை சுற்றியுள்ள சில பகுதிகளை மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அரசு அறிவித்துள்ளது. இவை பொதுப்பணி துறை கட்டுப்பாட்டின்கீழ் இயங்கி வருகிறது.

செம்பரம்பாக்கம் பாதுகாக்கப்பட்ட பகுதி என்ற அரசின் அறிவிப்போடு சரி. மற்றபடி, இங்கு வெளிநபர்கள் அத்துமீறி நுழைந்து பல்வேறு சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவதும், பலர் ஏரிக்குள் மீன்பிடிப்பதும், அப்போது கால் தவறி ஏரிக்குள் விழுந்து பலியாவதும், தற்கொலை செய்து கொள்வதும் என நாளுக்கு நாள் உயிர்ப்பலிகள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியில் மீன்பிடித்த மாங்காடு பகுதியை சேர்ந்த மீனவர் அண்ணாதுரை (49) என்பவர் நீரில் மூழ்கி பலியானார்.

இதேபோல் கடந்த மாதம் குன்றத்தூர் அருகே செல்வம் (32), கடந்த சில நாட்களுக்கு முன் குன்றத்தூரை சேர்ந்த உஸ்மான் (39), தனது மகள் அப்சனா (11), மகன் சுகில் (7) ஆகியோருடன் ஏரிக்குள் விழுந்து பரிதாபமாக பலியாகினர்.

இவை அனைத்துக்கும் பொதுப்பணி துறையின் அலட்சிய போக்கே காரணம்.எனவே, செம்பரம்பாக்கம் ஏரியில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கம்பி வேலி அமைத்து, அங்கு மக்கள் நுழைய விடாதபடி பொதுப்பணி துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: