திருமண தகவல் மையம் மூலம் பெண்களை கவர ‘வேஷம்’ ‘டுபாக்கூர்’ ராணுவ அதிகாரி கைது: ஜனாதிபதியுடன் ‘போஸ்’ கொடுத்த படங்கள் பறிமுதல்

லக்னோ: திருமண தகவல் மையம் மூலம் இளம்பெண்களை கவர்வதற்காக போலியாக ராணுவ அதிகாரி வேஷம் ேபாட்டு உலா வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் கவுதம் புத்த நகரைச் சேர்ந்த சவுரவ் சிங் என்பவர், சர்பாக் ரயில் நிலையத்தின் எம்.சி.ஓ அலுவலகம் முன் நடந்து கொண்டிருந்தார். அவர் ராணுவ அதிகாரியின் சீருடையுடன், பாரா கமாண்டோக்களின் பேட்ஜையும், மார்பில் பல பதக்கங்களையும், லெப்டினன்ட் நட்சத்திர பதக்கங்களையும், சிவப்பு தொப்பியுடன் இருந்தார். இவரை பார்த்து சந்தேகமடைந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ராணுவ உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதையடுத்து இந்திய ராணுவ புலனாய்வுப் பிரிவும், மத்திய ராணுவ காவல்துறையும் (சி.எம்.பி) சவுரவ் சிங்கை மடக்கி விசாரித்தனர்.

அப்போது அவர், தன்னை இந்திய ராணுவ அதிகாரிகள் பிரிவின் என்.டி.ஏ தொகுதியில் உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரி என்றார். ஆனால், பணியாற்றும் விபரம் குறித்த தகவல்களை அவரால் கொடுக்க முடியவில்லை. அதையடுத்து அவரை பிடித்த அதிகாரிகள், அவரது மொபைல் போன் மற்றும் அவரது பையை பறிமுதல் செய்தனர். அவரது மொபைல் போனில் ‘சவுரவ் தாக்கூர்’ என்று பெயரிடப்பட்ட பேஸ்புக் பக்கத்தில் தன்னை பாரா சிறப்புப் படைகளின் கமாண்டோ என்று தெரிவித்துள்ளார். மேலும், ஆக்ராவில் பணியாற்றுவதாகவும் அதில் பதிவு செய்துள்ளார். அதேபோல், திருமண பதிவு ‘மேட்ரிமோனியல்’ வலைத்தளங்களில், தன்னை ஒரு ராணுவ அதிகாரி என்றும் பதிவேற்றி உள்ளார். அவரது பையில் 2021 பிப்ரவரி 19ம் ேததிக்குள் பாராசூட் ரெஜிமென்ட்டின் படையில் சேருவதற்கான போலி உத்தரவு கடிதத்தையும் வைத்திருந்தார்.

மேலும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் விருது மற்றும் பதக்கம் பெறுவது போன்ற போலி புகைப்படத்தையும், ராணுவ அதிகாரிகளின் சீருடையில் அணியப்படும் அடையாள பேட்ஜைகளையும் வைத்திருந்தார். அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் சவுரவ் சிங்கை கைது செய்து விசாரிக்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘மேட்ரிமோனியல்’ திருமண மைய வலைதளங்களின் மூலம் இளம்பெண்களை கவர்வதற்காக தன்னை ராணுவ அதிகாரியாக காட்டிக் கொண்டுள்ளார். அதற்காக போலி ஆவணங்களை தயாரித்து பொதுவெளியில் வலம் வந்துள்ளார். தற்போது சிக்கிக் கொண்டார். அவரால் பாதிக்கப்பட்டவர் குறித்த விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.

Related Stories:

>