ரூ.35 லட்சம் மதிப்பிலான 74 கிலோ வெள்ளி கொலுசு பறிமுதல்

சேலம்: சேலத்தில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ.35 லட்சம் மதிப்பிலான 74 கிலோ வெள்ளி கொலுசை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சேலம் மேற்கு தொகுதிக்குட்பட்ட கந்தம்பட்டியில் பறக்கும் படை அலுவலர் பிரபாகரன் தலைமையில் குழுவினர் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த பைக்கை மறித்து அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் மூன்று பெரிய பைகளில் புதுவெள்ளி கொலுசுகள் 13 கட்டாக மறைத்து எடுத்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான ஆவணம் இல்லை.

இந்த விசாரணையில், பைக்கை ஓட்டி வந்தவர் செவ்வாய்பேட்டை தாண்டவராயன் நகரை சேர்ந்த சந்திரகாந்த் (40) என்பது ெதரியவந்தது. பனங்காட்டுக்கு மொத்த விற்பனைக்கு எடுத்துச்செல்வதாக கூறினார். ஆனால் மொத்த விற்பனையாளர் யார் என்ற தகவலை சொல்ல மறுத்தார். விற்பனை ரசீது இல்லாததால், அதிகாரிகள் 74.73 கிலோ வெள்ளி கொலுசை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.35 லட்சமாகும். பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளிக்கொலுசு சேலம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

கடலூர்

கடலூர் மாவட்டம் வேப்பூர் குறுக்கு ரோடு பகுதியில் நேற்று நள்ளிரவில் தேர்தல் பறக்கும் படையினர்  அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சேலத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற ஒரு காரில் சசிக்குமார் என்பவர் 37 கிலோ மதிப்பிலான வெள்ளிப் பொருள்களை ஆவணம் இன்றி கும்பகோணம் எடுத்துச் செல்வது தெரியவந்தது. மொத்தம் 1732 எண்ணிக்கையிலான வெள்ளி பொருட்கள் இருந்தது தெரியவந்தது. கைசெயின், கொலுசு, மெட்டி உள்ளிட்ட ரூ.27 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளி பொருட்கள் விருத்தாசலம் வட்டாட்சியர் சிவக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: