×

தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டுவதாலேயே பிரச்சனை : உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு சாடல்!!

மதுரை : தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி சென்று மீன்பிடிப்பதால்தான் அவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழக மீனவர்களை அத்துமீறி தாக்கும் இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி அமர்வு முன்பு நடைபெற்ற இந்த வாதத்தில், கடந்த ஜனவரி மாதம் 4 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டதை மனுதாரர் சுட்டிக் காட்டி இருந்தார்.

இந்திய அரசு இலங்கை கடற்படை மீது வலிமையான நடவடிக்கைகளை எடுக்காததால் இலங்கை அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகவும் மனுதாரர் குற்றம் சாட்டி இருந்தார். எனவே 4 தமிழக மீனவர்களை கொன்ற கடற்படையினரை கைது செய்யவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இலங்கை அரசு நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பதில் அளித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி செல்வதாலேயே தாக்குதலுக்கு உள்ளாவதாக கூறினார்.

அத்துடன் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதை தடுக்கும் வகையில் சிறப்புக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் வமதிய அரசு வழக்கறிஞர் விளக்கம் அளித்தார். எல்லைத் தாண்டும் போது அபாய ஒலி எழுப்பும் நவீன கருவிகளை வழங்கினால் இது போன்ற பிரச்னைகளை களையலாம் என கூறி இந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

Tags : Tamil Nadu ,Central government , தமிழக மீனவர்கள்
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...