234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட டிடிவி.தினகரன் முடிவு : தொகுதிக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு

சென்னை:சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கியதன் மூலம் 234 தொகுதிகளிலும் தனித்துபோட்டியிட டிடிவி.தினகரன் முடிவு செய்துள்ளார். தொகுதிக்கு ரூ.5 கோடி வீதம் ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில் பாஜக கூட்டணியில் அழைப்பு வந்தால் சேரவும் தயாராக இருப்பதாக தினகரன் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக கட்சிகள் வேட்பாளர் நேர்காணலை நடத்தி வருகின்றன. இந்தநிலையில், பாஜகவுடன் சேர்ந்து அதிமுக கூட்டணியில் இடம்பெறும் முயற்சியில் தினகரன் ஈடுபட்டார்.

இதற்கு பாஜக தலைவர்களும் சம்மதித்தனர். இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவரோ எக்காரணம் கொண்டும் தினகரனை கூட்டணியில் சேர்க்க முடியாது என்று கூறிவிட்டார். இதனால் பாஜக தலைவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த மக்களவை இடைத்தேர்தலில் அமமுக 52 தொகுதிகளில் கனிசமான இடங்களைப் பெற்றது. இதனால் 52 தொகுதியிலும் அதிமுக கூட்டணி தோற்கும் நிலை ஏற்படும் என்று அதிமுக தலைமையிடம் எச்சரித்தனர். ஆனால் அதற்கு எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மறுத்து விட்டனர். இதனால், தினகரனின் ஆதரவாளர்களை தங்களுடைய சின்னத்தில் போட்டியிட பாஜக கூறியது. ஆனால் அதற்கு தினகரன் மறுத்து விட்டார். கூட்டணியில் இணைந்து குக்கர் சின்னத்தில் போட்டியிடத் தயார் என்றார். ஆனால் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி சம்மதிக்கவில்லை. இதனால் தனித்துப் போட்டியிடும் முடிவுக்கு தினகரன் தள்ளப்பட்டார்.

அமமுக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்பமனு வினியோகம் நேற்று தொடங்கியது. முதல்நாளான நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்பமனுக்களை அளித்துள்ளனர். 2வது நாளாக இன்றும் விருப்ப மனு வினியோகம் நடைபெறுகிறது. இந்தசூழ்நிலையில் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா நேற்று அறிவித்தார். இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் சசிகலா மறைமுகமாக டிடிவிக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர் அரசியலில் இருந்து ஒதுங்கினாலும் தினகரனை ஒதுங்கும்படி கூறவில்லை. இதனால் தினகரன் தெம்பாகவே அரசியல் களத்தில் இறங்கியுள்ளார்.இந்தநிலையில், அமமுகவை 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட வைக்க டிடிவி.தினகரன் முடிவு செய்துள்ளார். சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் அவர் இன்று காலை அவசர ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்தும், தேர்தல் பிரச்சாரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும், தேர்தல் பிரச்சார வாகனம் மற்றும் போஸ்டர்களில் ஜெயலலிதாவின் படங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். சசிகலா படத்தை பயன்படுத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல், தொகுதிக்கு ரூ.5 கோடி வீதம் தேர்தல் செலவிற்காக ஒதுக்கவும் டிடிவி.தினகரன் முடிவு செய்துள்ளார். மேலும், சட்டப்பேரவை தேர்தல் விருப்பமனுக்கள் பெற்று வரும் நிலையில் விரைவில் வேட்பாளர் நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளது. இதேபோல், வரும் 10ம் தேதி 234 தொகுதிகளிலும் அமமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர் பட்டியலை டிடிவி.தினகரன்  வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories:

>