அரசு வங்கியில் நகைகளை அடகு வைத்தால் தேர்தல் முடிந்த பிறகு நகைக்கடன் தள்ளுபடி!: வதந்தியை நம்பி வங்கியில் குவிந்த பொதுமக்கள்..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அரசு வங்கியில் நகைகளை அடகு வைத்தால் தேர்தல் முடிந்த பிறகு நகைக்கடன் தள்ளுபடி ஆகும் என்று பரவிய வதந்தியால் நூற்றுக்கும் மேற்பட்டோர் அடகு வைப்பதற்காக தங்களது நகைகளுடன் வங்கியை முற்றுகையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டசபை இறுதிநாளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கூட்டுறவு வங்கியில் 6 சவரன் வகை வைத்துள்ள நகைக்கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அந்தியூர் அருகே அரசு வங்கியில் நகைக்கடன் வாங்க மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் என்ற கிராமத்தில் தான் இந்த வதந்தி பரவியது. இதனையடுத்து அங்குள்ள கனரா வங்கியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் நகைக்கடன் வாங்க குவிந்துள்ளனர். திடீரென கடன் வாங்க வந்த கூட்டத்தை கண்டு திகைத்து போன வங்கி அதிகாரிகள் வங்கியில் நகைக்கடன் பெற்றால் தள்ளுபடி செய்யப்படும் என்று பரவிய வதந்தி பொய்யானது.

நகை கடன் தள்ளுபடி ஆகாது என்று கிராம மக்களிடம் எடுத்து கூறியுள்ளனர். ஆனால் எப்படியாவது நகைக்கடன் பெற்றாக வேண்டும் என்று கிராம மக்கள் விடாப்பிடியாக வங்கியில் குவிந்து வருகின்றனர். இதுகுறித்து அந்தியூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அங்கு வந்த போலீசார் பொதுமக்களை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: