வாக்களர்களின் பிள்ளைகளுக்கு லஞ்சமா?: தஞ்சையில் ஜெயலலிதா, எடப்பாடி உருவ படம் பதித்த இலவச புத்தக பைகள் மூட்டை மூட்டையாக பறிமுதல்!!

தஞ்சை : அரியானாவிலிருந்து கண்டெய்னரில் இன்று தஞ்சை வந்த ஜெயலலிதா, எடப்பாடி உருவ படம் பதித்த 4420 இலவச புத்தக பைகளை பறக்கும் படை பறிமுதல் செய்தது. தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இன்று அதிகாலை முதல் ஒரு கண்டெய்னர் லாரி நீண்ட நேரமாக நின்றது. தகவலறிந்த தேர்தல் அலுவலர் தலைமையிலான பறக்கும் படையினர் அங்கு சென்று டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.

இதில் அந்த லாரி அரியானா மாநிலத்திலிருந்து தமிழக அரசின் இலவச புத்தக பை ஏற்றிக்கொண்டு தஞ்சை வந்தது தெரியவந்தது. பின்னர் லாரியில்சோதனையிட்டபோது அதில் புத்தக பை பண்டல்கள் இருந்தது. பண்டலை பிரித்தபோது அதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் படங்கள் அச்சிடப்பட்டிருந்தது.

இந்த பைகளை தஞ்சை மாவட்ட மாணவர்களுக்கு வினியோகிக்க மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு கொண்டு வந்தது தெரியவந்தது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலக அலுவலர்கள், தேர்தல் முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக பைகள் கொண்டுவரப்பட்டதாக கூறினர். அவை குடோனில் தேக்கி வைக்கப்படும் என்றும் அதற்கான ஆவணங்களையும் காட்டினர். இதையடுத்து ஆவணங்களை சரிபார்த்த பறக்கும்படையினர் லாரியை விடுவித்தனர். பின்னர் லாரி குடோனுக்கு சென்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: