கடலூர் மாவட்டம் வேப்பூரில் உரிய ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற 40 கிலோ வெள்ளி பொருட்கள் சிக்கின!: தேர்தல் பறக்கும் படை அதிரடி..!!

கடலூர்: கடலூர் மாவட்டம் வேப்பூரில் உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச்செல்லப்பட்ட 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன. உரிய ஆவணமின்றி ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் பணம், பரிசு பொருட்கள் எடுத்து செல்லக்கூடாது என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடலூர் மாவட்டம் வேப்பூரில் இன்று அதிகாலை சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், உரிய ஆவணமில்லாமல் காரில் கொண்டு சென்ற 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 40 கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர். விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் கண்காணிப்பு குழு, பறக்கும் படையை அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். விருத்தாசலம் வேப்பூர் அருகே தேர்தல் கண்காணிப்பு குழு கணேசன் தலைமையில் இந்த சோதனையானது நடைபெற்று வந்தது.

அச்சமயம் சேலத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி வந்த காரினை சோதனை செய்த போது உரிய ஆவணமின்றி வெள்ளி பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணை மேற்கொண்டதில் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பவர் கொலுசு, குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு, மோதிரம், தட்டு உள்ளிட்ட பொருட்களை விற்பனைக்காக கும்பகோணம் எடுத்துச்செல்வதாக தெரிவித்துள்ளார். உரிய ஆவணமில்லாததால் அனைத்து பொருட்களையும் அதிகாரிகள் கைப்பற்றி தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: