பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை!: டாப்ஸி, காஷ்யப் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம்..!!

மும்பை: இந்தி சினிமா இயக்குநர் அனுராக் காஷ்யப், நடிகை டாப்ஸி ஆகியோரது வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதின் பின்னணியில் பாரதிய ஜனதா அரசின் பழிவாங்கும் நடவடிக்கை இருப்பதாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தி திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான அனுராக் காஷ்யப், இயக்குனர் விகாஷ் பேல் உள்ளிட்டோர் இணைந்து கடந்த 2011ம் ஆண்டு பாண்டம் பிலிம்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பின்னர் 2018ல் மூடிவிட்டனர். இந்நிலையில் பாண்டம் நிறுவனத்தில் வரி ஏய்ப்பு நடைபெற்றிருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இயக்குநர் அனுராக் காஷ்யப், நடிகை டாப்ஸி, விகாஷ் பேல் ஆகியோருக்கு சொந்தமான மும்பை, புனே உள்ளிட்ட இடங்களில் உள்ள வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

கோவாவில் படப்பிடிப்பில் இருந்த காஷ்யப் மற்றும் டாப்ஸி ஆகியோரிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில், வருமான வரித்துறையினரின் இந்த நடவடிக்கை கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக கருத்துக்களை வெளியிடும் காஷ்யப் மற்றும் டாப்ஸி ஆகியோரது குரலை ஒடுக்க வருமான வரித்துறை மூலம் பாஜக அரசு முயற்சிப்பதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் மராட்டிய அமைச்சருமான நவாப் மாலிக் கூறியிருக்கிறார். வருமான வரித்துறை நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், தங்களுக்கு எதிராக கருத்துக்களை வெளியிடும் சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், திரை பிரபலங்களை மத்திய அரசு மிரட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் மூத்த வழக்கறிஞரும், சமூக செயற்பாட்டாளருமான பிரசாந்த் பூஷன், வருமானவரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் இந்த அளவுக்கு தவறாக பயன்படுத்தப்படுவதை இந்தியா இதற்கு முன் பார்த்ததில்லை என்று விமர்சித்திருக்கிறார். இதேபோல் அனுராக் காஷ்யப், நடிகை டாப்ஸியை குறிவைத்து நடத்தப்பட்ட சோதனைக்கு அவர்கள் புதிய வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்ததே காரணம் என்று பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் குற்றச்சாட்டுகளை மறுக்கும் வகையில் விளக்கம் அளித்துள்ள வருமானவரித்துறையினர், வலுவான ஆதாரங்கள் அடிப்படையிலேயே சோதனை நடைபெற்றதாக தெரிவித்துள்ளனர்.

Related Stories: