100வது நாளை எட்டியது டெல்லி விவசாயிகளின் போராட்டம் : தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக பிரசாரம் செய்ய முடிவு!!

டெல்லி : மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நாளை 100வது நாளை எட்டுகிறது. விவசாயிகளுக்கு ஆதரவாக மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு விரோதமானது எனக் கூறி நவம்பர் 26ம் தேதி முதல் டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு விவசாய சங்கங்களுடன் இதுவரை 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் 11 முறையும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்தநிலையில் விவசாயிகளின் போராட்டம் 99வது நாளை எட்டியுள்ளது. விவசாயிகள் போராட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாயிகளும் பங்கேற்று பதாகைகளை ஏந்திக் கொண்டு ஆதரவு தெரிவித்தனர். டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், மத்திய அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்து விரைவில் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக களம் காண முடிவு செய்துள்ளனர். பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நிற்கும் தொகுதிகளில் எதிர் அணியில் உள்ள வேட்பாளர்களை ஆதரிக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர். இதனிடையே மத்தியப் பிரதேசத்தில் முன்னாள் முதல்வர் டிக் விஜய் சிங், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று போராட்டத்தை தொடங்கி வைக்கிறார். போபால் உள்ளிட்ட பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>