திருப்போரூர் தொகுதி பாமகவுக்கு: அதிமுகவினர் எதிர்ப்பு

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. திருப்போரூர் தொகுதியை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.ஆறுமுகம், முன்னாள் எம்.எல்.ஏ. தண்டரை மனோகரன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட துணை செயலாளர் நாவலூர் முத்து, திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயலாளர் ராகவன், திருப்போரூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் சக்தீஸ்வரி சிவராமன் உள்ளிட்ட ஏராளமானோர் சீட் கேட்டு மனு செய்துள்ளனர். இருப்பினும் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.ஆறுமுகம், முன்னாள் எம்.எல்.ஏ. தண்டரை மனோகரன் ஆகிய இருவரில் ஒருவருக்கே தொகுதி என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்ட 23 தொகுதிகளுக்கான உத்தேச பட்டியலில் திருப்போரூர் மற்றும் செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ. திருக்கச்சூர் ஆறுமுகம், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, முன்னாள் மாவட்ட செயலாளர் பி.வி.கே. வாசு உள்ளிட்டோர் அக்கட்சியில் சீட் கேட்டு மனு செய்துள்ளனர். இந்நிலையில் செங்கல்பட்டு, திருப்போரூர் ஆகிய இரு தொகுதிகளில் திருப்போரூரை பா.ம.க.வுக்கு ஒதுக்க, அ.தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு திருப்போரூர் தொகுதி அ.தி.மு.க.வினர் தொடக்கத்திலேயே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கோஷ்டி பிரச்னையை காரணம் காட்டி தொகுதியை பா.ம.க.வுக்கு ஒதுக்கப்படுவதாக அ.தி.மு.க. தலைமை கூறியுள்ளது. ஆனால், எக்காரணம் கொண்டும் பா.ம.க.வுக்கு தொகுதியை ஒதுக்கக் கூடாது என்று கட்சியினர் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே பா.ம.க. கேட்ட மற்றொரு தொகுதியான செங்கல்பட்டு தொகுதியை பா.ஜ.வும் கேட்டுள்ளது. இந்த தொகுதியை பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் நிற்க உள்ளதாகவும் அவருக்காக இந்த தொகுதியை கேட்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், கடந்த 2011ம் ஆண்டு செங்கல்பட்டு தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் அனகை முருகேசன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனால் தே.மு.தி.கவும் செங்கல்பட்டு தொகுதியை குறி வைத்துள்ளது. செங்கல்பட்டு மற்றும் திருப்போரூர் தொகுதியை கேட்டு கூட்டணிக் கட்சிகள் நெருக்கடி கொடுப்பதால் அ.தி.மு.க. தலைமை முடிவெடுக்க முடியாமல் திணறி வருகிறது.

Related Stories:

>