வெள்ளை சட்டைக்கு கிராக்கி

சட்டமன்ற தேர்தலையொட்டி, அரசியல்வாதிகள் அணியும் வெள்ளை சட்டைக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாட்டால் அதன் விலையும் உயர்ந்துள்ளது. கிடைத்த இடத்தில், மொத்தமாக அரசியல்வாதிகள் வாங்கி செல்கின்றனர்.

சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது அனைத்து கட்சிகளிலும் வேட்பாளர்கள் நேர்காணல் நடந்து வருகிறது. அரசியல்வாதிகள் என்றாலே வெள்ளை சட்டை அணிவது வழக்கம். தேர்தல் பிரசாரத்தின் போது, சாதாரண கட்சி தொண்டர்கள் கூட வெள்ளை சட்டை அணிந்து பிரசாரத்தில் ஈடுபடுவர்.

சட்டமன்ற தேர்தல் பணி சூடுபிடிக்க துவங்கியுள்ளதால், ஜவுளி கடைகளில் வெள்ளை சட்டை விற்பனை அதிகரித்து, கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஜவுளி வியாபாரிகள் வெள்ளை சட்டைகளை அதிகளவில் விற்பனைக்காக வாங்கி வைத்துள்ளனர். வெள்ளை சட்டை விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ள நிலையில், தட்டுப்பாடை காரணம் காட்டி, அதன் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. அதையும், உடனுக்குடன் வாங்கி செல்கின்றனர். இதுகுறித்து துணிக்கடைக்காரர்கள் கூறுகையில், ‘கட்சி நிர்வாகிகள் வெள்ளை சட்டை கேட்டு மொத்தமாக ஆர்டர் கொடுத்துள்ளனர்.

சாதாரண கட்சி நிர்வாகிகள் கூட குறைந்தபட்சம், 300 முதல் 500 சட்டை வரை ஆர்டர் கொடுத்துள்ளனர். இதனால் வெள்ளை சட்டை விற்பனை சூடு பிடித்துள்ளது. தட்டுப்பாடை காரணம்காட்டி, கடந்தாண்டு ரூ250 முதல் ரூ300 வரை விற்பனையான வெள்ளை சட்டை, தற்போது ரூ400 முதல் ரூ450 வரை உயர்ந்துள்ளது’ என்றார்.

Related Stories: