தமாகாவுடன் அதிமுக பேச்சுவார்த்தை 12 தொகுதிகள் கேட்கும் ஜி.கே.வாசன்: இன்று தொகுதிகள் இறுதியாகிறது

சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தையை இறுதி செய்யும் நடவடிக்கையை அதிமுக தீவிரப்படுத்தியுள்ளது. பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தமும் கையெழுத்தானது. ஆனால் பாஜவுடனான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இதனால் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகா உள்ளிட்ட கட்சிகளுடனான பேச்சுவார்த்தையை  வேகமாக முடிக்க அதிமுக திட்டமிட்டுள்ளது. அதன்படி, நேற்று தமாகாவுடன் அதிமுக முதல்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியது. இதற்காக தமாகா பிரதிநிதிகளாக தமாகா துணை தலைவர் கோவை தங்கம், முன்னாள் எம்பி பி.ஆர்.எஸ்.வெங்கடேசன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் வேலுமணி இல்லத்துக்கு சென்றனர். அவர்களுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, கூட்டணியில் தமாகாவுக்கு 12 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதிமுக தலைமையிடம் தெரிவித்து உரிய தொகுதிகளை ஒதுக்குவதாக அவர்களும் உறுதி அளித்துள்ளனர். பேச்சுவார்த்தைக்கு பின்பு கோவை தங்கம் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘2001ல் தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் இருந்தது. ஜி.கே.மூப்பனார் வாங்கி கொடுத்த சின்னம் அது. ஜெயலலிதா இருக்கும் போது சைக்கிள் சின்னம்தான் தந்தார்கள். இது எங்களது அதிர்ஷ்ட சின்னம். எனவே, தமாகாவுக்கு 12 சீட் ஒதுக்க வேண்டும் என்று கேட்டோம். அதிமுக கூட்டணியில் மிகவும் நம்பிக்கைக்குரிய தலைவராக ஜி.கே.வாசன் உள்ளார்.

எனவே அவரது வேண்டுகோளை ஏற்று 12 சீட் உறுதிப்படுத்தி கொடுக்க கேட்டோம். ஜி.கே.வாசன் மீதான நல்ல எண்ணங்கள் எங்களுக்கு தெரியும். நீங்க சொன்னதை ஓபிஎஸ்-இபிஎஸ்சிடம் சொல்லி தொகுதிகளை உறுதிப்படுத்தி சொல்வதாக கூறினார்கள்’’ என்றார். அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, தமாகாவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து முடிவு செய்யப்படுகிறது. இதை தொடர்ந்து ஜி.கே.வாசன் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தி தமாகாவுக்கான தொகுதிகளை இறுதி செய்கிறார். அதை தொடர்ந்து தமாகாவுடன் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: