தேர்தல் அதிகாரிகள் தொடர்பான விவரங்கள் பொதுத்துறை இணைய தளத்தில் வெளியானது: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்காக, மாவட்ட தேர்தல் அதிகாரி, தொகுதி தேர்தல் அதிகாரி மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகளை நியமித்து கடந்த ஜனவரி 21ம் தேதி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தேர்தல் ஆணைய அறிவிப்பில் தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் அதிகாரிகளின் முகவரி, கைபேசி எண், வாட்ஸ் அப் எண், மின்னஞ்சல் முகவரி என்பன போன்ற தொடர்பு விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. இதுசம்பந்தமாக தமிழக தலைமைச் தேர்தல் அதிகாரிக்கு மனு அனுப்பியுள்ளோம்.

எனவே, தேர்தல் அதிகாரிகள் பெயர், தொடர்பு எண் உள்ளிட்ட   விவரங்களை உள்ளடக்கிய புதிய பட்டியலை வெளியிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பொதுத்துறை இணையதளத்தில், 230 தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் அதிகாரிகள் ஆகியோரின் தொடர்பு எண்கள், இ-மெயில் முகவரிகள் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது. மீதமுள்ள நான்கு தொகுதிகளில்  மூன்று தொகுதிகளுக்கான அதிகாரிகள் விவரங்கள் இன்று வெளியிடப்படும்.

உத்திரமேரூர் தொகுதிக்கான விபரங்கள் ஒரு வார காலத்திற்குள் வெளியிடப்படும் என்று உறுதியளித்தார். தேர்தல் ஆணையத்தின் உத்தரவாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தேர்தல் அலுவலர்களின்  விபரங்களை வெளியிடக்கோரி ஆர்.எஸ் பாரதி தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Related Stories: