விருதுநகரில் பரபரப்பு; தனியார் கல்லூரி உரிமையாளர் மீது ரூ60 கோடி மோசடி புகார்: விஷப்பாட்டில்களுடன் முற்றுகை

விருதுநகர்: விருதுநகர், சிவகாசி ரோட்டில் தனியார் பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, பிஎட் கல்லூரி, மெட்ரிக் பள்ளிகளை நடத்தி வருபவர் திருவேங்கட ராமானுஜதாஸ். இவர் கல்வி நிலைய வளர்ச்சிக்காக தனது சமுதாயத்தினரிடம் வட்டிக்கு பல லட்ச ரூபாய் வாங்கியுள்ளார். மாத வட்டி தருவதாக கூறியதை நம்பி பலர் லட்சக்கணக்கில் பணம் தந்துள்ளனர். இதன் மூலம் சுமார் 60 கோடி ரூபாயை திருவேங்கட ராமானுஜதாஸ் பெற்றதாக கூறப்படுகிறது. வட்டி தராததால், பணத்தை திருப்பி தரக்கோரி மூன்று ஆண்டுகளாக பலரும் போராடி வந்துள்ளனர். மாவட்ட குற்றப்பிரிவில் புகாரும் அளித்துள்ளனர்.

இந்நிலையில் கல்லூரி வளாகத்தில் 40 பேர் நேற்று முற்றுகையிட்டு கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு திருவேங்கட ராமானுஜதாஸிடம் கேட்டனர். மகள்களின் திருமணத்தை நடத்த முடியவில்லையென்றும், மருத்துவச்செலவிற்கு பணமில்லாமல் தவிப்பதாகவும் கூறியதுடன் விஷபாட்டில்களையும் எடுத்து வந்திருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட டாக்டர் வெள்ளைச்சாமி கூறுகையில், ``கல்லூரி மருத்துவர் என கூறி நிர்வாகத்தில் சேர்ப்பதாகவும், 1.5 சதவீத வட்டி தருவதாகவும் கூறி ரூ.40 லட்சம் வரை வாங்கி பல ஆண்டுகளாக திருப்பி தரவில்லை’’ என்றார். ஆலங்குளம் காளவாசல் கனகம்மாள் கூறுகையில், ``2016ல் கல்லூரி நிர்வாகத்திற்கு ரூ.7 லட்சம் பெற்றார்.

வட்டியும், அசலும் தரவில்லை. கணவரின் சிறுநீரக சிகிச்சைக்கு தாலி செயினை விற்றும் கடன் வாங்கியும் செலவழித்து வருகிறேன். பணத்தை தாராவிட்டால் விஷம் குடிப்பேன்’’ என்றார். விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில், திருவேங்கட ராமானுஜதாஸ் எழுத்துப்பூர்வமாக மே மாதத்திற்குள், பணம் கேட்ட 40 பேரின் பணத்தை திருப்பி தருவதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories:

>