செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பில் விருதுகளை மீண்டும் வழங்க கோரிய மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மறைந்த முதல்வர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று, கடந்த 2004ம் ஆண்டு தமிழ்மொழிக்கு செம்மொழி என்கிற அந்தஸ்து வழங்கப்பட்டது. 2008ல் சென்னையிலும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் துவங்கப்பட்டது.

அப்போது, முதல்வராக இருந்த கருணாநிதி அந்த நிறுவனத்திற்கு தன்னுடைய சொந்தப் பணத்திலிருந்து 1 கோடி ரூபாயை வழங்கி, அந்த நிதியின் மூலமாக தமிழக வரலாற்றின் பயன்மிக்க கல்வெட்டுகளை ஆய்வு செய்வோருக்கு ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது’ வழங்குவதற்கு வழிவகை செய்தார். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில், தமிழ்மொழி ஆராய்ச்சிக்காக கடந்த 2010ம் ஆண்டு வரை விருதுகள் வழங்கப்பட்டு வந்தது.

அதன்பின் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைந்ததும் அந்த விருதுகள் வழங்கப்படவில்லை. எனவே, அந்த விருதுகளை மீண்டும் வழங்க உத்தரவிடக் கோரி, மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, இது அரசியல் முடிவு எனவும், நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனவும் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Related Stories:

>