பூங்காவில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி: மின்வாரிய தலைவருக்கு ஆணையம் நோட்டீஸ்

சென்னை: தாம்பரம் அடுத்த சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் வரதன் (42), கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள். இவரது மூத்த மகன் கவுதம் (8). நேற்று முன்தினம் மதியம் வீட்டின் அருகே உள்ள பீர்க்கன்காரணை பேரூராட்சிக்கு உட்பட்ட பூங்காவில் விளையாடுவதற்காக சென்றுள்ளான். அப்போது பூங்காவில் இருந்த மின்விளக்கில் வெளியே தெரியும்படி aதொங்கிக் கொண்டிருந்த மின் கம்பி சிறுவன் மீது உராசி உள்ளது. அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், பேரூராட்சி அதிகாரிகளின் அலட்சியப்போக்கே இதற்கு காரணம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சமாதானம் செய்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்த செய்தி வெளியாகியது. இதனை பார்த்த மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்து விசாரித்தார். பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக மின்வாரிய தலைவர், பேரூராட்சி இயக்குனர் ஆகியோர் 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய, நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>