சட்டமன்ற தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை: வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்தது

சென்னை: சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரியுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 45 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் வந்துள்ளனர். இவர்கள் தற்போது தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, கூடுதலாக இன்னும் சுமார் 285 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் தமிழக தேர்தல் பாதுகாப்பு பணிக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க ஒரு தொகுதிக்கு 3 என்ற அடிப்படையிலும் 234 தொகுதியிலும் 702 பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு மற்றும் தலா ஒரு வீடியோ குழுவினர் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று காலை வீடியோ கான்பரன்சிங் மூலம் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகம் சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இந்த ஆலோசனையில் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில், தேர்தல் பார்வையாளர்களும் (ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகள்) பங்கேற்றனர். இவர்களுக்கு, தேர்தலுக்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற கூட்டத்தில், ‘‘தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலை பாதுகாப்புடன் நடத்த வேண்டும். அதேநேரம் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், தேர்தலை நேர்மையான முறையில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் தினசரி கைப்பற்றும் பணம், பொருட்கள் உள்ளிட்ட விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்’’ என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து நேற்று மாலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் கொரோனா பரவல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். குறிப்பாக 80 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு அளிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள் மிகவும் கவனமுடன் செயல்பட இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Related Stories: