திருவள்ளூர், காஞ்சி, செங்கை உள்பட 6 மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு குறையவில்லை: தமிழக சுகாதாரத் துறையுடன் மத்திய குழுவினர் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் தற்போது தினசரி 400 முதல் 500 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுகிறது. ஆனால், கடந்த சில நாட்களாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோன்று மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. எனவே, இந்த மாநிலங்களில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. மேலும், இந்த மாநிலங்களில் உள்ள நிலைமை தொடர்பாக மத்திய குழு ஆய்வு நடத்தும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதன்படி, மத்திய குழுவினர் நேற்று தமிழகம் வந்தனர். தொடர்ந்து, சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தில் தமிழக சுகாதார துறையினருடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர். இதில், தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக இயக்குநர் உமாநாத், தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம், சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை இணை ஆணையர் (பொறுப்பு) ஆல்பி ஜான் வர்கீஸ், தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் திட்ட இயக்குநர் குருநாதன் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றை தடுக்க வேண்டிய தடுப்பு நடைமுறைகள், தேர்தல் கால பிரசாரத்தின் போது ஏற்படும் கூட்ட நெரிசலினால் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து மத்திய குழுவினர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையை ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:

26 லட்சம் தடுப்பூசி தமிழகத்தில் உள்ளது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. சுகாதாரத்துறை பணியாளர்கள் 75 சதவீதத்திற்கு மேல் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

முன்கள பணியாளர்கள் மற்றும் தேர்தல் பணியில் இருப்பவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்த முன்வர வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முதியோர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இவர்களுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். சென்னையில் உள்ள 39 ஆயிரம் தெருக்களில் ஆயிரம் தெருக்களில் தொடர்ந்து 5 மற்றும் 6 கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்படுகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று குறையவில்லை. இங்கு ஆய்வு செய்யும் போது பல இடங்களில் மாஸ்க் போடாமல் உள்ளது தெரியவந்துள்ளது.

மாஸ்க் போடுவதை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்டங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகளில் தனிமனித இடைவெளி பின்பற்ற வேண்டும். தேர்தல் ஆணையத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்ய தயராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>