40 சீட்டும், கேட்கும் தொகுதிகளும் வேண்டுமாம் பாஜகவின் குடைச்சலால் ஆடிப்போன அதிமுக தலைமை: வெற்றி தொகுதிகளுக்கு குறிவைத்த பாமக

சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜ தங்களுக்கு 40 சீட்டும், கேட்கும் தொகுதிகளையும் ஒதுக்க வேண்டும் என்று குடைச்சல் கொடுத்து வருவதால் அதிமுக தலைமை ஆடிப்போய் உள்ளது. இன்னொரு பக்கம் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கேட்டு பாமக அடம் பிடித்து வருவது அதிமுக தலைமையை பதற்றத்தில் கொண்டுபோய் விட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6ம்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுக கூட்டணியில் தொகுதிகள் எத்தனை, எந்தெந்த தொகுதிகள் என்பதை பற்றி எல்லாம் கவலைப்படாமல், இங்க நாங்கதான் போட்டி போடுவோம். கொடுத்துவிடுங்க என கோதாவில் இறங்கியிருக்கிறது பாஜ.

ஆனால், 25 தொகுதிகள் வரை மட்டுமே பாஜவுக்கு ஒதுக்க அதிமுக திட்டமிட்டுள்ளது. ஆனால் 40 தொகுதிகளை ஒதுக்குவதோடு மட்டுமல்லாமல் நாங்கள் கேட்கும் தொகுதிகளையும் தந்தாக வேண்டும் என்று அதிமுகவிடம், பாஜ கறாராக கேட்டு வருவது அதிமுகவினர் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளதாம். அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு இத்தனை தொகுதிகள் ஒதுக்குவதே பெரிய விஷயம். அப்படி இருக்கும்பட்சத்தில் அதிமுக தலைமையை மிரட்டி சீட் கேட்கும் படலத்தை பாஜ கையிலெடுத்திருப்பது அதிமுக மூத்த தலைவர்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கியுள்ளதாம்.

இன்னொரு பக்கம் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அடம்பிடித்து கேட்கிறதாம் பாமக. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வன்னியருக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதால் ‘குறைவாக’ இருந்தாலும் இந்த தொகுதிகளை ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்றார் அன்புமணி. இப்போது எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து பேச்சுவார்த்தை தீவிரமாக நடக்கிறது. அதிமுகவிடம் பாமக கொடுத்திருக்கும் பல தொகுதிகள் அதிர்ச்சியைத் தான் தந்துள்ளனவாம். அதிமுக எளிதாக வெல்லும் என்கிற வாய்ப்புள்ள் தொகுதிகள் தான் பாமக கொடுத்த பட்டியலில் அதிகம் இருக்கிறதாம்.

இந்த தொகுதிகளைக் கேட்டுப் பெறுவதில் பாமக உறுதியாகவே நிற்கிறது. பாமகதான் இப்படி எனில் பாஜ தரும் குடைச்சல் அதிமுகவை ஆடிப்போக வைக்கிறது. பாஜ டெல்லி தலைமையோ, ‘சசிகலா, தினகரனை அதிமுகவில் சேருங்க என்றும், நாங்களும் அமமுகவும் தனியே உள் கூட்டணி வைத்துக்கொள்கிறோம். அதனால 60 தொகுதி கொடுங்க. நாங்க பிரிச்சுக்கிறோம்’ என்றும் அடம் பிடிப்பதால் இந்த கட்சிகளுக்கிடையேயான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.

இப்படியான நெருக்கடிகள் ஒரு பக்கம் அதிமுகவுக்கு இருந்து வரும் நிலையில், தமிழக பாஜவோ இன்னொரு பக்கம் அதிமுகவின் கோட்டையாக கருதப்படுகிற சில தொகுதிகளில் பாஜ வேட்பாளர்களை தன்னிச்சையாகவே அறிவித்து இவருக்கு ஓட்டுப் போடுங்க என பிரசாரத்தையே தொடங்கி இருக்கிறது.

அதுவும் நடிகைகள் குஷ்பு, கவுதமி என பிரபலங்களை வேட்பாளர்களாக வாக்காளர்களிடத்தில் அறிவித்து பிரசாரம் செய்து கொண்டிருக்கிறது பாஜ. மறுபுறம் பாமக தொகுதிகள் கேட்டு நெருக்கடி கொடுக்கிறது. அதேநேரத்தில் தொகுதிகளை தன்னிச்சையாகவே எடுத்துக் கொண்டு பாஜ பிரசாரமே செய்து வருகிறது. இந்த கடுமையான நெருக்கடிகளுக்குள் சிக்கியுள்ள அதிமுக தலைமையோ என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்பதாக அதிமுக மூத்த தலைவர்கள் சிலர் புலம்பி வருகின்றனர். எனவே இந்த விவகாரத்தில் என்ன மாதிரியான நிலைப்பாட்டை எடுப்பது என்பது குறித்து அதிமுக தரப்பு பெரும் பதற்றத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அதிமுக தலைமையை மிரட்டி சீட் கேட்கும் படலத்தை பாஜ கையிலெடுத்திருப்பது அதிமுக மூத்த தலைவர்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கியுள்ளதாம்.

Related Stories: