பேக்டரி தீவிபத்தில் தொழிலாளி பலி 5 பேர் கொண்ட குழு அமைத்து விசாரிக்க உத்தரவு: தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி நடவடிக்கை

புதுடெல்லி: வடக்கு டெல்லியில் இயஙகி வந்த பேக்டரி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி வாலிபர் பலியானது குறித்து பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் விசாரணை நடத்த குழு அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. வடக்கு டெல்லி பிரதாப் நகரில் உள்ள பேக்டரி ஒன்றில்  கடந்த மாதம் 27ம் தேதியன்று அதிகாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில்,  அங்கிருந்த தொழிலாளி ஒருவர் பலியானார். மேலும் மூன்று பேர் தீக்காயமடைந்து  சிகிச்சை பெற்று வருவதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. மேலும்,  சட்டவிரோதமாக அந்த தொழிற்சாலையில் பல்வேறு அறைகளில் பேக்கேஜ் யூனிட்  செயல்பட்டு வந்ததகவும் புகார் கூறப்பட்டது.

இந்நிலையில், பத்திரிகைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்பாயம் தாமாக முன்வந்து இதை வழக்காக பதிவு செய்தது.  இதனை விசாரித்த என்ஜிடி நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல், இந்த தீவிபத்து மரணம் குறித்து இ-மெயில் மூலமாக அறிக்கை அளிக்குமாறு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம்(சிபிசிபி), டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம்(டிபிசிசி), வடக்கு டெல்லி மாநகராட்சி மற்றும் வடக்கு டெல்லி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், விபத்து நடந்த இடத்திற்கு நேரில் ஓருமுறையாவது சென்று ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க சிபிசிபி, டிபிசிசி, தொழில்துறை பாதுகாப்பு இயக்குனர், வடக்கு டெல்லி மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர் அடங்கிய 5 பேர் குழுவை அமைத்து உத்தரவிட்டார்.

இந்தக்குழுவினர் தேவைப்படும்பட்சத்தில் துறைசார் நிபுணர்களின் உதவிகளை பெறலாம் என்றும், விபத்து நடந்த பகுதிக்கு ஒருமுறையேனும் நேரில் சென்று ஆய்வு நடத்திவிட்டு அதன்பின் பிற விசாரணைகளை ஆன்லைனில் நடத்திக்கொள்ளலாம் என்றும் அனுமதி அளித்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 30ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Related Stories:

>