×

பெரியோர்களே... தாய்மார்களே... தமிழகத்தில் ஒரு ஸ்மார்ட் சிட்டியையாவது காட்டவும்: குப்பை எடுக்கும் திட்டங்களுக்கு பல கோடி ஒதுக்கீடு; நிதியை வேறு பணிக்கு மாற்றி கோடிக்கணக்கில் கமிஷன்; சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

‘ஸ்மார்ட் சிட்டி’ - திட்டத்தின் பெயர் மட்டும் படு ஸ்மார்ட்டாக இருக்கிறதே தவிர, அதன் கீழ் இதுவரை நடந்துள்ள பணிகள் எல்லாம் நம்ம ஊர் நகராட்சிகள் ஆண்டாண்டு காலமாக வழக்கமாக செய்து வரும் பஸ் நிலைய பராமரிப்பு, பாதாள சாக்கடை போன்ற அடிப்படை பணிகளாகத்தான் இருக்கிறது. இதை தவிர புதிதாக வேறு எதுவுமே இல்லை. 2021ல் முடிக்க வேண்டிய ஸ்மார்ட் திட்ட பணிகளில் இதுவரை தமிழகத்தில் ஒன்று கூட முழுமை பெறவில்லை. இதற்கு காரணம் கமிஷன் மற்றும் அதிகாரிகளிடம் திட்டம் பற்றிய புரிதல் இல்லை. மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான பணத்தை வேறு திட்டங்களுக்கு திருப்பி பெரிய அளவில் கமிஷன் அடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் 11 மாநகரப்பகுதிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்கு தேர்வாகி உள்ளதாக கடந்த 2015ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டப்பட்ட பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட நகரங்கள் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியானவுடன் சென்னையே சிங்கப்பூராக மாறிவிடும். கோவை, ஜப்பானாக மாறிவிடும். சாலைகள் நம் முகத்தையே பார்க்கலாம். பஸ் முனையங்கள் லண்டன் தரத்தில் இருக்கும் என்றெல்லாம் விளம்பரப்படுத்தப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் என்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு வழிகாட்டி நெறிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.


alignment=



ஆனால் ஸ்மார்ட் சிட்டி நிதியில் கமிஷன் பார்க்கும் நோக்கிலேயே பெரும்பாலான அதிகாரிகளின் செயல்பாடு உள்ளது. கடந்த 2015ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் பல 2021ம் ஆண்டு முடித்து இருக்க வேண்டும். ஆனால் நடப்பாண்டான 2021ல், இதுவரை பல திட்டங்கள் தொடக்க நிலையிலும், டெண்டர், நிதி ஒதுக்கீட்டு அனுமதிக்காக காத்திருப்பது தான் நடந்து கொண்டிருக்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை உரிய காலத்தில் முடிக்காததால் போக்குவரத்து குளறுபடி, சாலைகள் பள்ளங்களாக மாறிய அவலம். தெருவியாபாரிகள் முதல் சூப்பர் மார்க்கெட் வியாபாரிகளின் வியாபாரங்கள் வரை அனைத்தும் பாதிக்கப்பட்டது தான் உண்மை. ஆங்காங்க பள்ளம் தோண்டி பொதுமக்களை கடைகளுக்கு வர முடியாமல் தடுத்துவிட்டனர்.

தமிழகத்தில் உள்ள ஒரு சாதாரண முனிசிபாலிட்டி தன் சொந்த நிதியில் செய்யும் பாதாள சாக்கடை பணிகள், பஸ்நிலைய கட்டுமானம், மழைநீர், கழிவுநீர் கால்வாய் பணிகளை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் செய்வது நகைப்புக்குரியது. திட்டம் தொடங்கி 5 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் பாதாள சாக்கடைக்காக தோண்டிய பள்ளங்கள் மற்றும் மூடிய பள்ளங்களால் தினமும் மக்கள் விபத்தை சந்திக்கும் அவலநிலைக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டமே காரணம். காரணம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட பல ஆயிரம் கோடி நிதியை அதிகாரிகள் துணையோடு தமிழக அரசு வேறு திட்டங்களுக்கு திருப்பி விட்டுள்ளது.


alignment=



இதன் மூலம் சிமென்ட், மண், கம்பி உள்பட அனைத்திலும் கமிஷன் பெற்றும், குறைந்த விலையில் பெற்ற பொருளுக்கு அதிகமாக விலை நிர்ணயித்து பில் பாஸ் செய்து அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தி உள்ளனர். குறிப்பாக, மதுரையில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த ரூ.12.43 கோடி, வைகை ஆற்றில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள ரூ.81 கோடி, பதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த ரூ.529 கோடி, பேருந்து நிலையம் மேம்பாட்டிற்கு ரூ.159 கோடி, பயோ மைனிங் திட்டத்திற்கு ரூ.24.83 கோடி, பழைமையான பகுதிகளை மேம்படுத்த ரூ.72 கோடி, குடிநீர் வினியோக திட்டத்திற்கு ரூ.177 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


alignment=



வேலூரில் பயோ மைனிங் திட்டத்திற்கு ரூ.13 கோடி, குடிநீர் வினியோகத்திற்கு ரூ.28 கோடி, புதிய பேருந்து நிலையம் அமைக்க ரூ.46 கோடி, பழைய பேருந்து நிலையம் மேம்படுத்த ரூ.29 கோடி, திடக்கழிவு மேலாண்மை வாகனங்கள் வாங்க ரூ.3.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழக அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஸ்மார்ட்டான திட்டங்களை எதுவும் செயல்படுத்தாமல் அரசின் நிதியில் செய்ய வேண்டிய மழைநீர் வடிகால், பதாள சாக்கடை, பேருந்து நிலையம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக குப்பை மேலாண்மை பணிகளுக்கு பல கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கமிஷனுக்காக இது போன்ற பணிகளுக்கு இந்த நிதியை செயல்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

* டாடா ஏசி வண்டி வாங்கிய தூத்துக்குடி மாநகராட்சி


ஸ்மார்ட் சிட்டி நிதியில் தூத்துக்குடி மாநகராட்சி ரூ.1.46 கோடிக்கு 22 டாடா ஏசி வண்டியை வாங்கியுள்ளது. மேலும் பயோ மெட்ரிக் முறையை செயல்படுத்த ரூ.7 லட்சம் செலவு செய்துள்ளது.

* எந்த மாநகராட்சியில் என்ன பணி?
சென்னை வில்லிவாக்கம் குளத்தை சீர் செய்ய ரூ.19.44 கோடி. மழைநீர் வடிகால் பணிகளை ரூ.144 கோடி, நீர் நிலைகளை சீரமைக்க ரூ.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த மழையில் தான் சென்னையே மழைநீர் வடிய வழி இல்லாமல் திணறியது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதைவிட போக்குவரத்து சாலைகள் அகலப்படுத்துதல், சுகாதார பணிகள், தினசரி குடிநீர் போன்ற அடிப்படை தேவைகள் இதுவரை கண்டுகொள்ளப்படவில்லை.

* தூங்குதா பொதுப்பணித்துறை


கோவை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிக்கு ரூ.12.5 கோடியும், உரம் தயாரிப்பு மையத்திற்கு ரூ.37 கோடி, பெரியகுளம், கிருஷ்ணம்பதி, சிங்காநல்லூர், செல்வபதி, குமராசாமி, உக்கடம் உள்ளிட்ட ஏரிகளை சீரமைக்க ரூ.100க்கு மேற்பட்ட கோடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறைக்கு ஏரிகள் பராமரிப்பு சீரமைப்பதில் நல்ல அனுபவம் உள்ளது. ஆனால், ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் திட்டம் உருவாக்கி ஏரியை புனரமைப்பது என்பது நிதியை வீணடிப்பதற்கு சமம். அந்த நிதியை வேறு திட்டத்துக்கு ஸ்மார்ட் சிட்டியில் பயன்படுத்தலாம். காரணம், ஸ்மார்ட் சிட்டியில் ஏரிகளை சீரமைத்தால் நிதியை எளிதில் சுருட்டலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

* இதுல எதுவுமே செய்யல


ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நகரத்தின் ஒரு பகுதியை தேர்வு செய்து அதை முன்மாதிரியாக மாற்றுவது, நடைபாதை அமைப்பது, இயந்திர வாகனம் சாரா போக்குவரத்து திட்டத்தை ஊக்குவிப்பது, பொது இடங்களை மக்களுக்கு ஏற்ற வகையில் மாற்றம் செய்வது, பல்வேறு குறைகளுக்கு எளிதாக தீர்வு காணும் திட்டங்களை செயல்படுத்துவ உள்ளிட்ட திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்

* கோடிகள் புரளும் ஸ்மார்ட் சிட்டி நிதி


தமிழகத்தில் 11 மாநகரட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்த தேர்வு செய்யப்பட்டது. அந்த வகையில், ஜனவரி மாதம் வரை 497 திட்டங்கள் எடுக்கப்பட்டு ரூ.16,347 கோடி மதிப்பில் பணிகள் நடந்து வருகிறது. இதில் ரூ.2,873 கோடி மதிப்பீட்டில் 497 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. ரூ.12.986 கோடி மதிப்பீட்டில் 310 பணிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.488 கோடி செலவில் 20 பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.

கால்வாய் ஊழலில் கரைந்த கரன்சிகள்:


நல்ல பஸ் நிலையங்களை சீரமைப்பதில் முறைகேடு

* ஈரோட்டில் பெரும்கள்ளம் கால்வாய்க்கு ரூ.183 கோடி, பயோ மைனிங் திட்டத்திற்கு ரூ.37 கோடி,
* தஞ்சாவூரில் நீர் நிலைகளை சீரமைக்க ரூ.10.25 கோடி, பயோ மைனிங் திட்டத்திற்கு ரூ.14 கோடி, பழைய பேருந்து நிலையத்தை மேம்படுத்த ரூ.14 கோடி, உர மையம் மைக்க ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* தூத்துக்குடியில் மார்க்கெட் அமைக்க ரூ.40 கோடி, பொது போக்குவரத்து முனையத்திற்கு ரூ.122 கோடி, மழைநீர் வடிகால் அமைக்க ரூ.200 கோடி, திருச்சியில் கழிவு நீர் கால்வாய் பணிக்கு ரூ.960 கோடி, சத்திரம் பேருந்து நிலையத்ைத மேம்படுத்த ரூ.17 கோடி, பயோ மைனிங் திட்டத்திற்கு ரூ.49 கோடி.
* நெல்லையில், பேருந்து நிலையம் அமைக்க ரூ.78 கோடி, பதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ.570 கோடி, சரக்கு முனையத்திற்கு ரூ.14 கோடி, திடக்கழிவு மேலாண்மைக்கு ரூ.4.86 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* திருப்பூரில் மேம்பாலம் அமைக்க ரூ.100 கோடி, ஸ்மார்ட் பேருந்து முனையம் அமைக்க ரூ.66 கோடி, குடிநீர் விநியோக பணிகளுக்கு ரூ.159 கோடி, மாநாட்டு மையம் அமைக்க ரூ.52 கோடி, குடிநீர் விநியோக 2 கட்ட திட்டத்திற்கு ரூ.992
* கோடி, பழைய பேருந்து நிலையத்தை சீரமைக்க ரூ.36 கோடி, புதிய பேருந்து நிலையத்தை மேம்படுத்த ரூ.29 கோடி, திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு ரூ.44 கோடி, ஆற்று பகுதி மேம்பாட்டுக்கு ரூ.156 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* ஏற்கனவே நன்றாக இருக்கும் பஸ் நிலையங்களை இடித்து அதை ஸ்மார்ட்டாக மாற்றுவதற்காக கோடிக்கணக்கில் பணம் செலவிடப்பட்டுள்ளது. பயணிகளை பொறுத்தவரை சில மணிநேரம் மட்டுமே பஸ்நிலையத்தில் இருக்கப்போகிறார்கள். இருக்கும் பஸ் நிலையத்தை ஒழுங்காக உள்ளாட்சி அமைப்புகள் பராமரித்தாலே சிறப்பக இருக்கும். ஆனால் அதை செய்யாமல் 50 கோடி, 60 என்று என்று இஷ்டத்துக்கு ஒதுக்கி நிதியில் முறைகேடு செய்கிறார்கள்.

* ஒரு ஸ்மார்ட் சிட்டிக்கு ரூ.1,000 கோடி


இந்தியாவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை மத்திய அரசு 2015ம் ஆண்டு அறிவித்தது. இதன்படி இந்தியாவில் உள்ள 100 நகரங்களை தேர்ந்தெடுத்து, அவற்றை ‘ஸ்மார்ட் சிட்டி’யாக மாற்ற தலா ரூ.1000 கோடி நிதி உதவி அளிக்கப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்த மொத்த செலவுத் தொகையில் தலா 50 சதவீதத்தை மத்திய, மாநில அரசுகள் வழங்கும்.

* 5 ஆண்டுகளில் முடிக்க வேண்டும்


ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்களில் தேர்வு செய்யப்பட்ட நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்கு அனைத்து திட்டங்களையும் முடிக்க வேண்டும் என்பது முக்கிய விதி. ஆனால் தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளை கடந்தும் எந்த ஒரு ஸ்மார்ட் சிட்டியும் இதுவரை முழுமை பெறவில்லை.

Tags : Tamil Nadu , Elders ... mothers ... show at least one smart city in Tamil Nadu: multi-crore allocation for garbage collection projects; Commissions in the millions to divert funds; Social activists blame
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...