‘அரசு அமைப்புகளில் வலுவாக காலூன்றி உள்ளனர்’ ஆர்எஸ்எஸ் மீது ராகுல் கடும் தாக்கு: ஒட்டு மொத்த கல்வி அமைப்பையும் சீர்குலைப்பதாக குற்றச்சாட்டு

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்தியதை தவறு என கூறிய ராகுல் காந்தி, ஆர்எஸ்எஸ் அமைப்பை தொடர்புபடுத்தி தற்கால அவசர நிலை குறித்து பேசினார். அரசின் அனைத்து துறைகளிலும் வலுவான காலூன்றிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர், ஒட்டுமொத்த கல்வி அமைப்பிலும் தாக்குதல் நடத்துவதாக கூறி உள்ளார். அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், இந்தியாவின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகருமான கவுசிக் பாசுவுடன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உரையாடினார்.

அப்போது ராகுல் பேசியதாவது: இந்தியாவின் சுதந்திரத்திற்காக காங்கிரஸ் போராடியது. அரசியலமைப்பை உருவாக்கியது. சமத்துவத்திற்கான கட்டமைப்பை ஏற்படுத்தியது. என் பாட்டி (முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி) அவசர நிலையை கொண்டு வந்ததை தவறு என்றே நினைக்கிறேன். அவரும் அதையே சொல்லி உள்ளார். ஆனால், அப்போதைய அவசர நிலைக்கும் தற்போதைய சூழலுக்கும் அடிப்படை வேறுபாடுகள் உள்ளன. அவசர நிலையை கொண்டு வந்தாலும், அரசு அமைப்புகளை கைப்பற்ற காங்கிரஸ் முயற்சிக்கவில்லை. எங்களின் கட்டமைப்பு அத்தகைய செயல்களை எப்போதும் அனுமதிக்காது.

இன்று ஆர்எஸ்எஸ் அமைப்பு நாட்டின் அனைத்து அரசியல் சாசன அமைப்புகளிலும் தங்களின் ஆட்களை ஊடுருவச் செய்துள்ளது. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் நாட்டின் அனைத்து அதிகார மையங்களிலும் வலுவாக உள்ளனர். நாங்கள் தேர்தலில் பாஜ.வை தோற்கடித்தாலும், நாட்டின் அதிகார மையங்களில் இருந்து அவர்களை அகற்ற முடியாது. இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை கூறலாம். மத்திய பிரதேசத்தில் முதல்வராக கமல்நாத் இருந்தபோது, அரசுத் துறையில் இருந்த மூத்த அதிகாரிகள் ஆர்எஸ்எஸ் ஆட்கள் என்பதால், முதல்வர் சொல்வதை அவர்கள் கேட்கவில்லை.

ஜனநாயகத்தின் கழுத்தை பாஜ நெரித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த கல்வி அமைப்பும் குறிவைக்கப்பட்டுள்ளது. வரலாறு மாற்றி எழுதப்படுகிறது. அவற்றை நீங்கள் மீட்டெடுக்க வேண்டும். சமத்துவம் என்ற எண்ணத்தின் மீது ஆர்எஸ்எஸ் தனது பள்ளிகள் வழியாக தாக்குதல் நடத்துகிறது. பாகிஸ்தானில் தீவிர இஸ்லாமியர்கள் நடத்தும் மதரசாக்களைப் போல ஆர்எஸ்எஸ் பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிக்கு எங்கிருந்து எப்படி பணம் வருகிறது என்பதை பற்றி யாரும் கேள்வி கேட்பதில்லை. இந்தியாவின் கல்வி அமைப்பை மாற்றி, அதை தனது கைக்குள் கொண்டு வர ஆர்எஸ்எஸ் முயற்சிக்கிறது.இவ்வாறு ராகுல் கூறினார்.

* எங்களை மட்டுமே கேள்வி கேட்பது ஏன்?

உட்கட்சி தேர்தல் குறித்து ராகுல் கூறுகையில், ‘‘காங்கிரசின் உட்கட்சி ஜனநாயகத்தை மேம்படுத்த நான் பல ஆண்டுகளாக பேசி வருகிறேன். இதற்காக எனது கட்சி நிர்வாகிகளால் விமர்சிக்கப்பட்டேன். உட்கட்சி ஜனநாயகத்திற்கு நான் ஆதரவாக உள்ளேன். ஆனால், ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கிறது. காங்கிரசிடம் எழுப்பப்படும் இந்த கேள்வி பாஜ, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி என வேறெந்த கட்சியிடமும் எழுப்புவதில்லையே ஏன்?’’ என்றார்.

* நகைப்புக்குரியது

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், ‘‘மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தையும், தேசப்பற்றையும் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றுகிறது ஆர்எஸ்எஸ். அவசரநிலை பிரகடனப்படுத்திய போது அரசு அமைப்புகளை காங். கைப்பற்றவில்லை என ராகுல் கூறுவது நகைப்புக்குரியது’’ என்றார்.

* கோழைத்தனத்தால் மோசமான விளைவு

ராகுல் நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘சீனா எல்லையில் வழக்கமான அத்துமீறலுடனும், சைபர் படைகளுடனும் இந்தியாவை அச்சுறுத்துகிறது. மத்திய அரசு சிக்கித் தவிக்கிறது. என் வார்த்தைகளை குறித்துக் கொள்ளுங்கள், தேப்சங்கில் நமது நிலம் பறிபோய் விட்டது. மத்திய அரசின் கோழைத்தனம் எதிர்காலத்தில் சோகமான விளைவுகளுக்கு வழிவகுக்கும்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: