பலாத்காரம் செய்த பெண்ணையே கல்யாணம் பண்றீயா? விட்டு விடுகிறோம்... உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளியிடம் கேள்வி

புதுடெல்லி: ‘ஏற்கனவே அளித்த வாக்குறுதியின்படி பலாத்காரம் செய்த பெண்ணையே திருமணம் செய்து கொள்கிறீயா? விட்டு விடுகிறோம்,’ என்று குற்றவாளியிடம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கேட்டது. மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர், தனது உறவுக்கார மைனர் பெண்ணை பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக, பெண்ணின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றார். அப்போது, வாலிபரின் தாயார் அவரை தடுத்து, ‘உன் மகளையே நான் மருமகளாக ஏற்றுக் கொள்கிறேன். என் மகன் மீது புகார் கொடுக்காதே...’ என்று அவரிடம் மன்றாடினார். இதையடுத்து, அவர்கள் இவரும் சேர்ந்து ஒரு ஒப்பந்தத்தை நோட்டரி வக்கீல் முன்னிலையில் செய்து கொண்டனர்.

அதில், பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி 2018, ஜூன் 2ம் தேதி திருமண வயதான 18ஐ எட்டியதும் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால், சிறுமி 18 வயதை எட்டியதும் வாலிபரின் தாயார், அப்பெண்ணை தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க மறுத்தார். இது தொடர்பாக வாலிபர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க முயன்றனர். அப்போது, அந்த வாலிபர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார். பின்னர், பெண்ணின் தாயார் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், வாலிபரின் முன்ஜாமீனை மும்பை உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் கிளை ரத்து செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வாலிபர் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு கடந்த திங்கட்கிழமை தலைமை நீதிபதி எஸ்ஏ.பாப்டே அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த அமர்வில் நீதிபதிகள் ராமசுப்ரமணியம், ஏஎஸ்.போபண்ணா ஆகியோரும் இடம் பெற்றனர். விசாரணையின் போது ஆஜரான வாலிபரிடம், ‘ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, பலாத்காரம் செய்த பெண்ணையே திருமணம் செய்து கொள்கிறீயா? விட்டு விடுகிறோம்... இல்லை என்றால், நீ சிறைக்கு செல்ல நேரிடும்...’ என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.  நீதிபதிகளின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தலைமை நீதிபதி பாப்டேவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தா காரத் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், இந்த கருத்துககு பல்வேறு பெண்கள் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், இது பற்றி உச்ச நீதிமன்ற அதிகாரிகள் அளித்துள்ள விளக்கத்தில், ‘ஏற்கனவே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில்தான், குற்றம் சாட்டப்பட்டவரிடம் நீதிபதிகள் இந்த கேள்வியை கேட்டனர். பின்னர், வழக்கை விசாரித் நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து, கீழ் நீதிமன்றத்தில் நிவாரணம் தேடும்படி மனுதாரருக்கு உத்தரவிட்டனர்,’ என்று கூறியுள்ளனர்.

Related Stories: