மத்திய அரசுக்கு எதிராக கருத்து கூறுவது தேசத் துரோகம் அல்ல: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: மத்திய அரசின் முடிவுக்கு எதிராக அதிருப்தி தெரிவித்து கருத்து கூறுவது தேசத் துரோகம் ஆகாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ கடந்த 2018ம் ஆண்டில் மத்திய அரசு ரத்து செய்தது. அதன் பிறகு, அதனை ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது, காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாடு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா, 370வது சட்டப் பிரிவை மத்திய அரசு திரும்ப பெற, சீனாவின் உதவியை நாட இருப்பதாக கூறினார்.

இதையடுத்து, இந்தியாவின் விஸ்வ குரு சர்தார் படேல் அமைப்பை சேர்ந்த ரஜாத் சர்மா, ஸ்ரீவத்சவா ஆகியோர், பரூக் மீது தேசத் துரோக நடவடிக்கை எடுக்கும்படி கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி எஸ்கே. கவுல் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதிகள், `மத்திய அரசின் முடிவுக்கு எதிராக அதிருப்தி தெரிவித்து கருத்து கூறுவது தேசத் துரோகம் ஆகாது. நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தும் அளவுக்கு, அவரது பேச்சில் குற்றம் இருப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. இது அவர்களது பெயர்கள் செய்திகளில் இடம் பெற வேண்டும் என்ற விளம்பரத்துக்காக தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனு என்று தெரிகிறது. இது போன்ற செயல்களை ஊக்குவிக்க கூடாது. எனவே, ரூ.50,000 அபராதத் தொகையை, உச்ச நீதிமன்ற வக்கீல்கள் நலச் சங்க நிதிக்கு 4 வாரங்களுக்குள் செலுத்த வேண்டும்,’’ என்று கூறி தீர்ப்பளித்தனர்.

Related Stories:

>