மினி லோடு வேனில் கடத்திய 400 கிலோ குட்கா பறிமுதல்: அண்ணன், தம்பி உட்பட 4 பேர் கைது

அண்ணாநகர்: நொளம்பூர், திருமங்கலம், கோயம்பேடு, மதுரவாயல், அமைந்தகரை, அரும்பாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மளிகை கடை, பெட்டி கடைகளுக்கு குட்கா விற்பனை செய்வதாக நொளம்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நொளம்பூர் உதவி கமிஷனர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை போலீசார் நொளம்பூர் சுற்றுவட்டார பகுதியில் வாகன சோதனையை தீவிரப்படுத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நொளம்பூர் கம்பர் நகர் பகுதியில் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த மினி லோடு வேனை மடக்கினர். போலீசாரை கண்டதும் அந்த வேன் வேகமாக சென்றது. போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்து ஆய்வு செய்தனர். அதில் 400 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, அதில் குட்கா கடத்தி வந்த இருவரை கைது செய்து நொளம்பூர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அண்ணன், தம்பியான ராமநாதன்(32), கணேஷ்(29) ஆகியோர் கேளம்பாக்கம் அம்லா நகர் பகுதியில் வாடகை வீட்டில் 10 வருடங்களாக தங்கி மினி லோடு வேன் மூலம் மளிகை கடை, பெட்டி கடைகளுக்கு குட்கா விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் குட்கா சப்ளை செய்த நொளம்பூர் பகுதியை சேர்ந்த கற்குவேல்(22) மற்றும் செல்வகுமார்(45) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>