மாவட்டம், மண்டலம் வாரியாக சென்னையில் மது விற்பனையை கண்காணிக்க பறக்கும் படை: தேர்தல் அதிகாரி பிரகாஷ் தகவல்

சென்னை: சென்னையில் மதுபான விற்பனையை கண்காணிக்க மாவட்டம், மண்டலம் வாரியாக பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெறுவதையடுத்து சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.  அதன்படி தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணாக மதுபானங்கள் கடத்தலுக்கு எதிரான புகார்கள், தினசரி விற்பனையை கண்காணித்தல், மொத்தமாக கொண்டு செல்வதை தடுத்தல், அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டும் கடைகள் செயல்படுவதை கண்காணித்தல், கொரோனா வைரஸ் தொற்று குறித்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுதல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் வகையில் மாவட்ட அளவிலான பறக்கும் படை குழு மற்றும் மண்டல அளவிலான பறக்கும் படை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. எனவே, தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணாக மதுபானங்கள் கடத்தல் மற்றும்  விற்பனை தொடர்பான புகார்களை பொதுமக்கள் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு  1800-425-7012 என்ற எண்ணிலும், மேற்குறிப்பிட்டுள்ள அதிகாரிகளின் கைபேசி எண்ணிற்கும் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: