ரவுடி படுகொலையில் ஒருவர் கைது தலைமறைவான 8 பேருக்கு வலை: நண்பன் கொலைக்கு பழிக்குப்பழி

பூந்தமல்லி: மதுரவாயல் ரவுடி கொலையில், வாலிபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், நண்பனை கொலை செய்ததால், பழிக்குப்பழி வாங்கியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை மதுரவாயல் அடுத்த கங்கையம்மன் நகர், 6வது தெருவை சேர்ந்தவர் சண்முகம் (28). பிரபல ரவுடி. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. மதுரவாயல் காவல் நிலையத்தில் சரித்திரபதிவேடு குற்றவாளியாக இருந்தார். கடந்த சில மாதங்களாக கார்பென்டர் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சண்முகம், வேலை முடிந்து வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சிலர், திடீரென சண்முகத்தின் வீட்டுக்குள் நுழைந்து அவரை அரிவாளால் வெட்ட முயன்றனர்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அங்கிருந்து வெளியே தப்பியோடினார். ஆனால் மர்மநபர்கள், அவரை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினர். தகவலறிந்து மதுரவாயல் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் போலீசார், நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டதும் பைக்கில் வந்தவர்கள், அதனை போட்டு விட்டு தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார், அவர்களை விரட்டி சென்று, ஒரு வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், ஆரோக்கியம் (எ) ஆரோக்கியராஜ் (21), மதுரவாயலில் கொலை செய்துவிட்டு தப்பி சென்றதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவரை, மதுரவாயல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த 2017ம் ஆண்டு மதுரவாயலில் ஏற்பட்ட தகராறில், சங்கர் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சண்முகம், விடுதலையாகி சில மாதங்களுக்கு முன்பு வெளியே வந்துள்ளார். இதையறிந்த சங்கரின் நண்பர்கள் ஆரோக்கியராஜ், அந்தோணிராஜ் ஆகியோர் நண்பரின் கொலைக்கு பழிக்குப்பழியாக சண்முகத்தை வெட்டி கொலை செய்தது தெரிந்தது. மேலும் தலைமறைவாக உள்ள சீனு (எ) அறுப்பு சீனு, அந்தோணிராஜ், சுரேஷ் உள்பட 8 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: