×

பூந்தமல்லி அருகே பரபரப்பு ‘விடிஞ்சா கல்யாணம்’ வரவேற்புக்கு முன் அழகு நிலையம் சென்ற மணமகள் ‘எஸ்கேப்’: திருமண மண்டபத்தை சூறையாடிய மாப்பிள்ளை வீட்டார்

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே, விடிந்தவுடன் திருமணம் நடைபெற இருந்த நிலையில், அழகு நிலையம் சென்ற மணமகள் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தார். இதனால், ஆத்திரமடைந்த மணமகன் வீட்டார், திருமண மண்டபத்தில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். பேனர்களை கிழித்து எறிந்தனர். இதையொட்டி அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், மதுராந்தகத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து, பூந்தமல்லி அருேக நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு, உறவினர்களுக்கு வழங்கப்பட்டது. திருமணத்துக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தடல்புடலாக நடந்தன.

நேற்று முன்தினம் மாலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் என பலர் மண்டபத்துக்கு வந்தனர். நீண்ட நேரமாகியும் மணப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த மணமகன் வீட்டார், மணமகள் வீட்டாரை தொடர்பு கொண்டு கேட்டனர். அப்போது, பியூட்டி பார்லருக்கு சென்ற மணமகளை காணவில்லை என தெரிந்தது. இதனால் மணமகன் வீட்டார் அதிர்ச்சியடைந்தனர்.

சிலர், ஆத்திரமடைந்து, அங்கு வைத்திருந்த வரவேற்பு பேனர்களை கிழித்து எறிந்தனர். மண்டபத்தில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். திருமணம் நின்றதால் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் வேதனையுடன் திரும்பி சென்றனர்.
இதுகுறித்து நசரத்பேட்டை போலீசில் மணமகன் வீட்டார் புகார் செய்தனர். அதில், ‘திருமணம் நின்றதால், பெண் வீட்டார் தங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்’ என்று கூறினர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Escape ,Vidinja ,Poonamallee , The bride 'Escape' who went to the beauty parlor before the sensational 'Vidinja wedding' reception near Poonamallee: The groom who looted the wedding hall went home
× RELATED குடல் அழற்சி தப்பிப்பது எப்படி?