அமெரிக்க பட்ஜெட் குழு இயக்குனர் நியமன பரிந்துரையை வாபஸ் பெற்றார் நீரா: அதிபர் பைடனுக்கு முதல் சறுக்கல்

வாஷிங்டன்: அமெரிக்காவின் பட்ஜெட் குழு இயக்குனராக நியமிக்க அதிபர் ஜோ பைடனால் பரிந்துரைக்கப்பட்ட இந்திய வம்சாவளி நீரா டாண்டன், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக பின்வாங்கினார். அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் தனது ஆட்சி நிர்வாகத்தில் இந்திய வம்சாவளிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். அந்த வகையில், வெள்ளை மாளிகையின் அதிகாரமிக்க பொறுப்புகளில் ஒன்றான பட்ஜெட் மற்றும் அலுவலக மேலாண்மை இயக்குனர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த பொருளாதார வல்லுநர் நீரா டாண்டனை நியமிக்க பரிந்துரைத்தார்.

ஆனால், இவருக்கு குடியரசு கட்சியின் செனட் உறுப்பினர்களும், ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த சில எம்பி.க்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். செனட்டில் 51 சதவீத எம்பி.க்கள் ஆதரித்து வாக்களித்தால் மட்டுமே, நீராவால் இப்பதவியை பெற முடியும், ஆனால், அவருக்கு எதிர்ப்பு அதிகமாக இருப்பதால், வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. இதனால், நீரா தனது நியமன பரிந்துரையை வாபஸ் பெறுவதாக நேற்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் அதிபர் பைடனுக்கும் கடிதம் அனுப்பினார். அதிபர் பைடனால் பரிந்துரைக்கப்பட்டு, நியமிக்க முடியாமல் தோல்வி அடைந்த முதல் நபர் நீரா டாண்டன்தான். இவருக்கு பதிலாக வேறு நபரை பரிந்துரைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.

* வேறு பொறுப்பு

அதிபர் பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நீராவின் சாதனைகள், அவரது அனுபவம் மற்றும் திறமைக்கு மிகுந்த மதிப்பளிக்கிறேன். எனவே, எனது ஆட்சி நிர்வாகத்தில் நிச்சயம் அவருக்கு பொருத்தமான வேறு பொறுப்பு வழங்கப்படும்,’ என கூறியுள்ளார்.

Related Stories: