கிராமத்தின் திறமைசாலிகளும் சாதிக்க கல்வியில் மொழி தடை தகர்க்கப்பட வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘ஏழை, கிராமப்புறத்திலிருந்து வரும் திறமையானவர்களும் வாழ்வில் வளம் பெற, கல்வி அமைப்பில் உள்ள மொழி தடைகளை தகர்க்கும் நடவடிக்கை துரிதமாக எடுக்கப்பட வேண்டும்,’ என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

கல்வித்துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு குறித்து காணொலியில் நடந்த கருத்தரங்கில் பிரதமர் மோடி பேசியதாவது: அறிவையும், ஆராய்ச்சியையும் கட்டுப்படுத்துவது நாட்டின் ஆற்றலுக்கு செய்யப்படும் பெரிய அநீதியாகும். இந்த சிந்தனையுடன், விண்வெளி, அணுசக்தி, டிஆர்டிஓ, விவசாயம் போன்ற பல துறைகளின் கதவுகள் நமது திறமையான இளைஞர்களுக்காகத் திறக்கப்படுகின்றன. கல்வியை வேலைவாய்ப்பு, தொழில்முனைவோர் திறனுடன் இணைப்பதற்கான அரசின் முயற்சியை மத்திய பட்ஜெட் விரிவுபடுத்தி உள்ளது. தற்சார்பு இந்தியாவை கட்டமைக்க, இளைஞர்கள் தங்களுக்குள் நம்பிக்கை கொண்டிருப்பது முக்கியம்.

எதையும் உள்ளூர் மொழில் படிக்கும் போதுதான் முழுமையாக உள்வாங்கி புரிந்து கொள்ள முடியும். அந்த வகையில், உள்ளூர் மொழிகளுக்கு புதிய தேசிய கல்விக் கொள்கை அதிக முக்கியத்துவம் தரும். ஒன்றாம் வகுப்பு முதல் உயர் கல்வி வரை நமது இளைஞர்களுக்கு சிறந்த பாட உள்ளடக்கம் இந்திய மொழிகளில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். நம் நாட்டில் திறமைக்கு பஞ்சமில்லை. உள்ளூர் மொழியை தவிர வேறெந்த மொழியும் தெரியாத கிராம வாசிகளிலும் பல திறமைசாலிகள் இருக்கின்றனர். அவர்களின் திறமை வீண் போகக் கூடாது. எனவே, நமது கல்வி அமைப்பில் உள்ள மொழி தடைகளை தாண்டி திறமைகள் வளர, உள்ளூர் மொழிகளில் வாய்ப்புகளை வழங்க மிகத் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

* மன்மோகன் எச்சரிக்கை

கேரளாவில் உள்ள ராஜீவ் காந்தி மேம்பாட்டு ஆய்வு மையத்தில் நடந்த விழாவில், முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங் காணொலி மூலமாக பங்கேற்று பேசினார். அதில் அவர், ‘‘2016ல் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை, நாட்டையும் அதன் பொருளாதாரத்தையும் சீர்குலைத்து விட்டது. கூட்டாட்சி தத்துவத்தை பிரதமர் மோடி பின்பற்றுவது இல்லை. மாநில அரசுகள் அதிகளவில் கடன் வாங்குகின்றன. இதனால், மத்திய அரசின் பொது நிதி சீர்குலைந்து வருகிறது. இதன் காரணமாக, எதிர்காலத்தில் மத்திய அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது,’’ என்றார்.

* காடுகள் பாதுகாப்பு

உலக வனவிலங்குகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் ‘வன உயிரினங்களின் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள அனைவரையும் வணங்குகிறேன். சிங்கம், புலி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளின் எண்ணிக்கை இந்தியாவில் சீராக அதிகரித்து வருகிறது. நமது காடுகளின் பாதுகாப்பையும், விலங்குகளுக்கு பாதுகாப்பான வசிப்பிடங்களையும் உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் எடுக்க வேண்டும்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: