நாள்தோறும் ஒருவர் நீதி கேட்டு கூக்குரல்: உபி அரசு மீது பிரியங்கா சாடல்

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில், ஒவ்வொரு நாளும் ஒருவர் நீதி கேட்டு கூக்குரலிடுவதாக அம்மாநில அரசை, காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி சாடியுள்ளார். உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ ஆட்சி நடக்கிறது. இங்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில், 2018ம் ஆண்டில், புலந்த்சாகர் மாவட்டத்தில் 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில், ஜாமீனில் வெளியே வந்துள்ள குற்றவாளி, அச்சிறுமியின் தந்தையை நேற்று முன்தினம் ஹத்ராசில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். இது தொடர்பாக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், `பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் தந்தை வழக்கை திரும்ப பெறாததால், ஹத்ராசில் கொலை செய்யப்பட்டார். காணாமல் போன சிறுமியின் சடலம் பல நாட்களுக்கு பிறகு, புலந்த்சாகரில் உள்ள வீட்டில் தோண்டி எடுக்கப்பட்டது. உபி.யில் ஒவ்வொரு நாளும் ஒருவர் நீதி கேட்டு கூக்குரலிடுகின்றனர்,’ என கூறியுள்ளார்.

Related Stories: