பள்ளிக்கூடம் கட்ட நிலம் வழங்கும் விவகாரம்: ஆம்ஆத்மி அரசுக்கு நோட்டீஸ்: உயர்நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பள்ளிக்கூடம் கட்டுவதற்காக சொந்த நிலத்தின் உரிமையை அரசுக்கு எழுதிக்கொடுக்க தயாராக இருப்பதை தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்க ஆம் ஆத்மி அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. வடகிழக்கு டெல்லியை சேர்ந்த மன்சா ராம் என்பவர் கடந்த 2009ம் ஆண்டு காலமாகிவிட்டார். அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார். இவர்களுக்கு சொந்தமான 5,000 சதுர அடி கொண்ட காலி நிலம் வடகிழக்கு டெல்லியின் காரவால் நகரில் உள்ளது. இந்த நிலத்தின் உரிமையை அரசுக்கு எழுதி தர மன்சாவின் மகன்கள் மற்றும் மகள் விருப்பம் தெரிவித்து அரசுக்கு கடிதம் எழுதினர். ஆனாலும், அதற்கு இதுவரை எந்தவித பதிலும் அரசு தரப்பில் இருந்து இல்லை.

இதனை சுட்டிக்காட்டி மன்சாவின் வாரிசுகள் மூவரும் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது: எங்கள் பகுதியில் நல்ல நிலையில் உள்ள சீனியர் செகண்டரி பள்ளி எதுவும் இல்லை. இங்குள்ளவர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் தான் சேர்த்து படிக்க வைக்கின்றனர். ஆனால், தற்போதைய தொற்று நோய் பரவல் காரணமாக வேலையிழப்பை சந்தித்துள்ள பலரும் தங்களது குழந்தைகளுக்கு கல்வி கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். எனவே, இங்கு அரசு பள்ளிக்கூடம் கட்டுவதற்கு எங்களுக்கு சொந்தமான நிலத்தை அரசுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி தர தயாராக உள்ளோம்.

இதுகுறித்து கடந்த ஆண்டு ஜூன் மாதமே அரசுக்கு கடிதம் எழுதி எங்களது விருப்பத்தை தெரிவித்தோம். துரதிர்ஷ்டவசமாக அரசு அதிகாரிகள் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் எங்களுக்கு இதுவரை வரவில்லை. எனவே, எங்கள் நிலத்தின் உரிமையை அரசு தர காத்திருக்கிறோம். அங்கு பள்ளிக்கூடம் கட்ட அரசு முன்வர வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.  இந்த மனுவை விசாரித்த நீதிபதி பிரதீபா எம் சிங், தனித்துவமான கோரிக்கையை முன்வைத்துள்ள இந்த மனுவிற்கு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 30ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Related Stories: